புதுச்சேரி என்கின்ற தந்திர பூமி...
ஏ.சுகுமாரன்
நீதி ஒழுங்கில்லா புதுச்சேரியின் வீதி ஒழுங்கானது என்ற ஒரு சொலவடை உண்டு. புதுச்சேரி சுதந்திரம் அடைந்ததற்குப் பின் மட்டுமல்ல அதற்கு முன்னரே கூட ஒரு தந்திர பூமியாகத்தான் வழங்கி வந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் எங்கும் இல்லாத வண்ணம் ஒரு மிகச் சிறிய சட்டமன்றத் தொகுதிக்கு, சுமார் 3000 ஓட்டுக்கள் வாங்கினால் வெல்லக்கூடிய புதுச்சேரி நகரத்தில் உள்ள தொகுதிக்கு செலவு சுமார் ஒரு கோடி ரூபாய். இதே சமயம் அருகில் உள்ள தமிழ்நாட்டின் 5 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கான செலவே ஒரு ரூபாய் ஒரு கோடியைத் தாண்டாது.இத்தனை மதிப்பு வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி எத்தனை மகிமையும் மாட்சியும் கொண்டிருக்க வேண்டும் தெரியுமா?புதுவை அரசியல் அதன் ஆதிகாலம் தொட்டே மிக்க விறுவிறுப்பும் திருப்பங்களும் நிறைந்தது. என்னதான் தனிப்பட்ட சாதனை என்ற பலம் துணை இருந்தாலும், விளைந்து நிற்கும் பயிராகிய ஓட்டுக்களை அறுவடை செய்து கட்டுக்கட்டி ஓட்டு இயந்திரத்துக்குக் கொண்டு சேர்ப்பதற்குக் கட்டுகட்டாக பணம் இருந்தாலொழிய இயலாது என்கிற காலம் இது.புதுச்சேரியை பிரஞ்சுக்காரர்கள் ஆளும்போதே தேர்தல் திருவிழாவானது, கிருஸ்துமஸ் திருவிழாவை விட அதிகமாக மக்களால் விரும்பி வரவேற்கப் பட்டது. தேர்தல் நடைபெறுவதற்கு ஒருவாரம் முன்னமே வாக்காளர்கள் நான்கு தெருவிற்கு ஒன்று என வேட்பாளர்களால் வாடகைக்கு பிடிக்கப்பட்ட வாக்காளர் மாளிகைக்கு அழைத்து செல்லப்படுவர். பிறகு இந்திரலோகம் என்பதும் ராஜ சுகம் என்பதும் அங்கு நடைபெறும் உபசாரத்தில் தான் காணலாம். காலையில் கண் விழித்ததும் ஆவி பறக்கும் காபி முதலாக காலை முதலே ரொட்டி, முட்டை என காலை ஆகாரம், பிறகு விரும்பும் நேரத்தில் எல்லாம் மேல் நாட்டு மது வகைகள் மதியம் முழுமையான சாப்பாடு, சூப்பில் தொடங்கி அனைத்து வகை இறைச்சிகள், கிடைக்கும் எல்லாவிதமான கடல் உயிர் வாழினங்கள் என அவரவர் விருப்பம் போல் சாப்பாடு, தேனிலவுக்கு வந்தவர்கள் போல் இன்பமாய் இருக்க தனியிடம், புதிய ஆடைகள், இறக்குமதி செய்யப்பட்ட சோப், நறுமண பொருட்கள் இதற்குமேல் கையில் சுடசுடப் பணம். வாக்காளர்கள் வேட்பாளரின் உபசாரத்திலும், கண்காணிப்பிலும் இருப்பார்கள். இதில் இடைஇடையே இந்த மாளிகையில் இருந்து போட்டி வேட்பாளரின் மாளிகைக்கு நடைபெறும் கடத்தல் நாடகங்களும், பேரங்களும் வேறு உண்டு. இத்தனை கஷ்டங்களும், முயற்சிகளும், அபரிமிதமான செலவுகளும் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற லட்சிய வேட்கை கொண்டுதான் நடைபெற்று இருக்கும் என நீங்கள் நினைத்தால், நீங்கள் தான் கள்ளம் கபடமற்ற அகில உலக அப்பாவி எனலாம்.இத்தகு நிலையிலேயே இதே பாணியில் புதுச்சேரியில் இதே முறையே வெற்றிகரமாக கையாண்டு முதல் முதலமைச்சராகவும், மேயராகவும் விளங்கியவர் எதுவாய் குபேர் என்கிற வல்லாதி வல்லவர். புதுவையின் காங்கிரஸ் ஆட்சிக்கு வித்திட்டவர் அவரே எனலாம். பின் அடுத்தடுத்து பல அரசியல் அதிசயங்கள் தொடர்ந்து புதுவையில் நடைபெற்றன.முதல்வர் பட்ஜெட்டை படிப்பதற்கு முன்பே எதிர்கட்சி தலைவர் பரூக் பட்ஜெட்டை சட்டசபையில் படித்து, அரசையே கவிழ்த்த படலம் அஇஅதிமுக முதல்வர் ராமசாமி இருந்த குறுகிய காலத்தில் நடைபெற்றதும் இந்த தந்திர பூமியில்தான். பிறகு முப்பது வயதுக்குள்ளேயெ இந்தியாவின் மிக இளைய சபாநாயகராகவும், மிக இளைய முதல்வராகவும் பணிபுரிந்த பாரூக் மரைக்காயர் அரசியல் செய்த தந்திரபூமியும் இதுதான். சட்டசபை நடைபெறும் போதே கலகலவென கரன்சி நோட்டுகள் ஒன்பதரை லட்சம் ரூபாயை கட்டுக்கட்டாக சபையில் கொட்டி பரபரப்பு ஏற்படுத்திய அப்போதைய மூப்பனார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கந்தசாமி, (தற்போது காங்கிரஸ் அமைச்சர்) தனக்கு லஞ்சம் கொடுத்து கட்சி மாறச் சொன்னதாக புகார் கூறி சி.பி.ஐ. வழக்கு வரை சென்ற ஸ்தலம் இதுதான்.எங்கள் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது என அறைகூவல் அறிக்கை விட்டு முதல்வருக்கு எதிராக செயல்படும் அமைச்சரவையைக் கொண்ட அதிசய பூமி இது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தில் அமைச்சரவைக்கு கூட்டுப் பொறுப்பு என்று ஒன்று உள்ளதே அது புதுவைக்கு மட்டும் ஏன் பிரயோகமாகவில்லை? என்ற விக்ரமாதித்தியனிடம் கேட்கத் தகுந்த கேள்வியை உடைய நிலம் இது.மாநில அந்தஸ்த்து கோரி ஏகமனதாய் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போது ஒரு அமைச்சர் மட்டும் மிகத் தீவிரமாய் அதை சட்டசபையிலேயே எதிர்த்த நிகழ்வு கண்ட பீடுடைய பூமி இது. ஆனால் அந்த அமைச்சரின் நேர்மைத்திறனை பாராட்டத்தான் வேண்டும்.சாதனைகள் என்று அறிவிக்கப்பட்ட ரூ.1200 கோடி திட்டமான தனியார் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் விமான நிலையம், கோர்ட் வளாகம், பிலிம் சிட்டி அரசு மருத்துவ கல்லூரி போன்ற அறிவித்து பாதியில் தொங்கிக் கிடக்கும் பல திட்டங்களை குறித்து கவலையே படாத ஸ்ரீமான் பொது ஜனங்களையும் கொண்டது இந்த சிறப்பு பூமி.இங்கிருந்துதான் மோகன் குமார மங்கலம், பாலா பழனூர், பரூக் மரைக்காயர் தற்போதைய நாராயணசாமி போன்ற பலர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகி மத்திய மந்திரிகளாக டெல்லியில் கோலோட்சிய மாட்சியை பொருந்திய பூமி இது.இன்னும் எத்தனை எத்தனை பரபரப்புகள், ஒரு முதல்வர் ஆறுமாதம் பதவி வகித்தும் அவரால் எம்.எல்.ஏ. ஆக இயலாமல் அவருக்கு இடம் விட்டுத்தர ஒரு உறுப்பினர் ஆதரவாளரும் தயார் இல்லாததால் பதவி விலகிய புண்ணிய பூமி இது.இத்தகு புதுவையின் வாக்காளர்கள் தொகை வெறும் ஒன்பது லட்சம்தான், ரேஷன் கார்டுகளோ மூன்று லட்சம் தான் ஆனால் ஆண்டு ஒன்றிற்கு செலவே 1750 கோடி அதாவது நபர் ஒருவருக்கு சுமார் ரூ.20,000. எண்ணிப்பாருங்கள். இந்தப் பணம் உரியவருக்கு உரியபடி சேருகிறதா? ஆனால் இங்கேதான் வேதனைகளும் அதிகம், இந்தியாவின் தற்கொலை தலைநகரமும் இந்த பெருமை மிகு புதுவை தான். டிப்ளமோ படித்த நபருக்குச் கிடைக்கும் மாத சம்பளம் 1500, அதுவே டிகிரியாய் இருந்தால் 3000 மாத சம்பளம். இதுதான் உள்ளூர் பாமரன் சாமான்யன் பெறும் மாத சம்பளம். எங்கேயோ படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. கையில்லாமல், காலில்லாமல், கண்ணில்லாமல் மனிதருண்டு எங்கேயாவது வயிறில்லாத மனிதருண்டா? வயிறு என்று ஒன்று இருக்கும்வரை விவகாரங்கள் பல உண்டு, பசி உண்டு, ஆசை உண்டு, ஆசாபாசங்கள் உண்டு மேலும் அதை வைத்து அரசியலும் உண்டு.புதுவையில் தொடரும் தற்கால அரசியல் நிகழ்வுகளையும் கடந்த கால வரலாற்று சுவடுகளையும், விலாவாரியாக இவர் போய் அவராய் அவர்போய் இவராய் என அதுவே தொடராய் வெறி போல; என சம்பவிக்கும் அவலங்கள் தொடர்ந்து வருகின்றன.
Saturday, June 14, 2008
வடக்குவாசல் ஜூன் இதழில் வெளிவந்த எனது படைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment