Saturday, October 11, 2008

18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள் --ஏ.சுகுமாரன்

18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள் --ஏ.சுகுமாரன்
முதலில் சித்தர் போகர் கூறியதில் இருந்து ஆரமிப்போம் .இது திரட்டியது .தான் இதன் மூலம் சதுரகிரி புராணத்தில் உள்ளது அறிமுக உரை மட்டும் என்னுடையது இந்த தொடரின் இறுதியில் நூல் கிடைக்கும் இடம் முகவரி தருகிறேன் .காயகல்ப முறைகளை மூலத்தில் உள்ளபடியே தருகிறேன் .செய்து பார்ப்பது அவரவர் விருப்பம் .நான் சிபாரிசு செய்யவில்லை இது பதிவு செய்யப்படவேண்டும் எனவே இதை எழுதுகிறேன் .தங்குந்த குருவின் துணை தேவை .
பொதுவாகவே சித்தர்கள் எவரும் அவரவர்களது சொந்தப் பெயரால்
அழைக்கப்படுவதில்லை. அவர்களது சித்தம் தெளிந்து சித்தர்கள் நிலையை அவர்கள்
அடையும்போது அதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையும் அவர்கள் சொந்த பெயர்,
அதனை ஒட்டிய அவரது நிகழ்வுகள், அனுபவங்கள் மறைந்து சித்தர் என்ற பொது
வழியிலே செல்ல ஆரம்பிக்கும்போது, மக்கள் அவர்களது அப்போதைய நிலையைக்
குறிக்கும் வேறு ஒறு உருவப் பெயரால் அழைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
அப்படித்தான் பாம்பாட்டி சித்தர், அழுகுணி சித்தர், சட்டைநாதர், என்று அந்த
நாட்களிலும் , விசிறி வைத்திருந்ததால் விசிறி சாமியார் என்று இந்த நாள் வரை மரபு
தொடர்ந்து வருகிறது.சித்தர் போகர் தமிழ்நாட்டில் பிறந்த பொற்கொல்லர் மரபை சேர்ந்தவர் என்று
கருதப்படுகிறார். இவரது சீடர் புலிப்பாணி என்னும் சித்தர் ஆவார். அவர் புலி மேல் ஏறி
பயணம் செய்து வந்ததால் புலிப்பாணி என்று அழைக்கப்பட்டதாக கூறுவார்கள்.
போகர் இயற்றிய நூலில் போகர் 7000 என்பது மிக முக்கியமானது. துவாத காண்டம்
என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. . இவர் தனது சீடர்களுடன் சீனா தேசம் சென்று
அங்கு ரசவாதக்கலையும், விமானம் முதலியன செய்வதைப் பற்றியும் நூல்கள் செய்தும்
உபதேசங்கள் செய்தும் சிலகாலம் இருந்ததாக கூறப்படுகிறது .பின் தமிழ்நாடு திரும்பி ஆவினன் குடியை அடுத்த சிறுகுன்றில் நவபாஷாணத்தால்
'தண்டாயுதபாணி' என்ற தெய்வத்தை படைத்து அதற்கு பூஜா விதிகளையும்
விதித்தார்.குறிப்பிட தக்கது அந்த சிலை தண்டு ( குச்சி )வைத்திருந்ததால்
தண்டாயுதபாணி. --முருகர் கீழே ஆவினன் குடியில் தான் உள்ளார் .பிறகு அங்கு தண்டாயுதபாணிக்கு அருகிலேயே தனக்கு ஒரு சமாதியை செய்து அதில்
சமாதி ஆனார்.
போகர்ரின் காயகல்ப முறை இது கேள்வி பதில் பாணியில் அமைத்துள்ளது :
"சுவாமீ! இனி நாங்கள் தேக சித்தி யடைவதன் பொருட்டு ஏதாவது சில கற்ப
முறைகளைக் கூறியருள வேண்டுமென்று கேட்க, அதற்கு முனிவர் ஐவர்களே! உலகத்தில் நம்மைப் போன்ற சித்தர்கள்
அனுபவத்திலிருந்து வருகிற அநேக கற்ப முறைகளிற் சிலவற்றை இப்பொழுது
உங்களுக்குக் கூறுகிறேன்.
அதாவது, இவ்வனத்தின் மேற்குத்திசைக் கன்னி மூலையில் தில்லை விருக்ஷமென்
றொன்றுண்டு. அதனை முகம்வீங்கி விருக்ஷமென்றுஞ் சொல்லுவார்கள். அவ்விருக்ஷம்
கறுப்பு நிறமாகவும், கிளைகள் சாம்பல் வர்ணமாகவும், சிறிதாகவும், இலை
அகத்தியிலை போலவும் இருக்கும். அதன் பாலைக் கரத்தாற்றீண்டாது அரைக்காற்
படிகொண்டு வந்து தாமிரத் தகட்டை இலேசாகத் தட்டி அப்பாலில் ஒரு மண்டலம்
ஊறப்போட்டுப் பின்பு அதையெடுத்து வீரமும் பூரமும் சேர்த்து அப்பாலேயே விட்டு
அரைத்துத் தகட்டை யெடுத்துக் கவசஞ்செய்து குக்குடபுடமிடச் சுண்ணமாகும்.
அச்சுண்ணத்தை ஆவின் நெய்யிற் குழப்பி மூன்றுநாள் சாப்பிடக் காயசித்தியாகும்.
இன்னொரு முறையாவது, அந்தத் தில்லை விருக்ஷமிருக்கு மிடத்திற்குத் தென்திசையில்
ஒரு திட்டு இருக்கிறது. அதன் கீழே மணல் வாரி யோடை யென்ற ஓர் வாய்க்கால்
இருக்கிறது. அவ்வாய்க்காலின் கரையில் சிவந்த இலைக்கள்ளி யென்றொரு மூலிகை
உண்டு. அதனுடைய இலை சிவப்பு நிறமாக இருக்கும். அதன் பாலைக்
குன்றிமணியிடை சர்க்கரையிற் சேர்த்து மூன்றுநாள் புசிக்கவேண்டும். மறு மூன்றுநாள்
வரை பத்தியத்துடனிருந்து, பகலில் மோரன்னமும், இரவில் பாலன்னமும் அருந்தத்
தேகசித்தியாகும் என்று கூறி யருளினர். "இது குறித்து விவாதங்களை எதிர்பார்க்கிறேன் .
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

No comments: