Tuesday, September 02, 2008

செய்திகள் செப் 2--

புதிய புதுவை அமைச்சர்கள் பட்டியலுக்கு சோனியா ஒப்புதல்நமச்சிவாயம் அமைச்சராகிறார் --ஆடம்பர கொண்டாட்டம் வேண்டாம்----வைத்திலிங்கம் வேண்டுகோள் --ஏ.சுகுமாரன்
புதுச்சேரி அமைச்சர்கள் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்படி நமச்சிவாயமும் அமைச்சராகிறார்.புதிய அமைச்சரவை 4-ந்தேதி பதவி ஏற்கும் என்று தெரிகிறதுபுதுவையில் புதிய அமைச்சரவை பதியேற்பு விழாவை முன்னிட்டு கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைத்து ஆரம்பரமாக கொண்டாட வேண்டாம், காமராசர் வழிநடக்கும் நமது காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் எங்களது பதவியேற்பு விழாவை முன்னிட்டு ஆரம்பரம் இல்லாமல் மிக எளிமையான முறையில் தங்களின் அன்பையும், ஆதரவையும் தருமாறு வேண்டுகிறேன்.என்று தொண்டர்களுக்கு வைத்திலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்



தமிழக புதிய வாக்காளர் 35 லட்சம் பேர்--மொத்த வாக்காளர் 4.29 கோடி நரேஷ் குப்தா பேட்டி --ஏ.சுகுமாரன்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது தமிழக வாக்காளர் இறுதிப்பட்டியல் செப்டம்பர் மாதத்துக்குள் வெளியிடப்படும். இதில், 4 கோடியே 29 லட்சம் பேர் இடம்பெறக்கூடும் என்று தெரிவித்தார்.தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், புதிதாக பெயர் சேர்ப்போர், தொகுதி மாறியோர் போன்றவர்கள் அது தொடர்பான திருத்தங்கள் செய்வதற்கான அவகாசம் அளிக்கப்பட்டது. இதில், எதிர்பாராத வகையில் மிக அதிக எண்ணிக்கையில், 35 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டியல் திருத்தத்தின்போது, 13 லட்சம் முதல் 15 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.இப்போது, தேர்தல் வருவதால் வாக்காளர்களிடம் ஓட்டு போட ஆர்வம் அதிகரித்திருக்கலாம். அதனால் நிறைய விண்ணப்பங்கள் வந்திருக்கலாம். இதுதவிர, அரசியல் கட்சிகள், மக்களை ஊக்கப்படுத்தியதும் காட்டியதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்கள் தொடர்பான விண்ணப்பங்கள், சிறப்பு முகாம்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள், கல்லூரிகள் மற்றும் இன்டர்நெட் மூலமாக பெறப்பட்டன. இன்டர்நெட் வாயிலாக (ஆன்லைன்) 6,700 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் சென்னையில் அதிகபட்சமாக 2,433 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்றவை மேற்கொள்ளப்படும் அதேநேரத்தில் இறுதிப்பட்டியலில், முகவரி மாறியவர்கள், உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.

தமிழகத்தில் 2008-ம் ஆண்டில் மக்கள்தொகை 6 கோடியே 60 லட்சமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கு பிறகு, மேலே சொன்ன தொகையில் 65 சதவீதத்தினர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று கருதுகிறோம் (சுமார் 4 கோடியே 29 லட்சம் வாக்காளர்கள்). இந்த தொகையானது, தமிழக மக்கள்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையை சற்று ஏறக்குறைய ஒத்திருக்கக்கூடும்.இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
அண்ணாவின் வாரிசுகளுக்கு நிதியுதவி!கருணாநிதி ரூ.10 லட்சம் வழங்கினார் --ஏ.சுகுமாரன்

அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள் மறைந்த சி.என்.ஏ. பரிமளம் மற்றும் சி.என்.ஏ. இளங்கோவன், சி.என்.ஏ.கவுதமன், சி.என்.ஏ.பாபு ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கடந்த 30-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
முதல்-அமைச்சர் கருணாநிதி மறைந்த சி.என்.ஏ. பரிமளத்தின் மகன்கள் மலர்வண்ணன், சவுமியன், மகள் இளவரசி ஆகியோரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். அதே போல் சி.என்.ஏ. இளங்கோவனுக்கும் முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மறைந்த சி.என்.ஏ.பரிமளத்தின் மகன்களும், மகளும் மற்றும் சி.என்.ஏ. இளங்கோவன் ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
பிகாரை வாட்டும் கடும் வெள்ளம் ! 20 லட்சம் பேர் தவிப்பு ! --ஏ.சுகுமாரன்
பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.நேபாள நாட்டில் இருந்து பாயும் கோசி ஆற்றில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பீகாரில் ஓடும் அந்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.பல ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. நூற்றுக் கணக்கான வீடுகள் இந்த வெள்ளத்தில் இடிந்து விட்டன. 20 லட்சம் பேர் வீடுகளை இழந்ததுடன், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.
மீட்பு பணிகளுக்காக 28 ஆயிரம் மாநில போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களுடன் ராணுவமும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நேற்று வரை மொத்தம் 4 ஆயிரத்து 500 (37 கம்பெனி) ராணுவ வீரர்களை மத்திய அரசு மீட்புப் பணிக்காக பீகாருக்கு அனுப்பி வைத்துள்ளது.நேற்று வரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்
இனி ஏடிஎம் போனால் வருமான வரி கட்டலாம்,! --ஏ.சுகுமாரன்
வருமான வரி கட்ட இனிமேல் எந்த கஷ்டமும் தேவை இல்லை. நேராக வீடு அருகே இருக்கும் வங்கி ஏடிஎம்முக்கு சென்றால் போதும். உடனே கட்டிவிட்டு திரும்பலாம். மேலும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை வருமான வரித் துறை பயன்படுத்த உள்ளது. இதன் மூலம் ஒருவர் செலுத்திய வரித் தொகையும், கணக்கையும¢ சரி பார்த்து, வரித் தொகை ஏதேனும் திரும்பத் தர வேண்டுமா என விரைவாக கண்டறிய முடியும். கடந்த ஆண்டில் நேரடி வரி வசூல் ரூ.3.14 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.3.95 லட்சம் கோடி வசூலிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. --

No comments: