Tuesday, April 08, 2008

நடந்தாய் வாழி காவேரி நீயும் பின்னால் நட ஒகேனக்கல் --சுகுஜி--


நடந்தாய் வாழி காவேரி நீயும் பின்னால் நட ஒகேனக்கல் --சுகுஜி--
கலைஞரின் ஒகேனக்கல் திட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. கர்நாடகாவில் புதிய அரசு ஏற்பட்டதும் அதனிடம் பேசி ஒரு முடிவு காணலாம் என்ற அறிக்கை பல்வேறு தரப்பிலும் பல்வேறு எதிர் விளைவுகளை உண்டாக்கி விட்டது.

மருத்துவர் ராமதாஸ் இது 1998ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம், ஏன் இதுவரை செய்ய முடியாமல் போனது என்ற கேள்விக்கு கவிஞர் கனிமொழி தகுந்த பதிலையே கூறியிருக்கிறார். தாமதத்திற்காக அவர் தரப்பில் கூறப்படும் நிர்வாகக் காரணங்கள் அனைத்தும் சரியானவையே. ஏற்றுக் கொள்ளக் கூடியவை தான். சமீபத்தில் தான் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் 2008ம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.1334 கோடி நிதி உதவி பெற்று வந்தார். ஆனால் அப்போதெல்லாம் கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. எனவே ஒரு சலசலப்பும் இல்லை. இப்போது மே மாதம் தேர்தல் என்று ஆனவுடன், ராமர் ரதமோ, ராமர் பாலமோ ஒன்றும் இப்போது கூறுவதற்கு இல்லாததால், கொஞ்ச நாள் முதல்வர் எடியூரப்பா, ஓடத்தில் ஒரு ரவுண்ட் ஒகேனக்கல் வந்து ஆட்டத்தை துவக்கி வைத்தார்.
பார்த்தது இதர கட்சிகள், இந்த சமயத்தில் வாளா இருந்தால் மக்கள் நம்மை சும்மா விட்டுவிடுவார்கள் என்று அவரவர்களால் முடிந்த அளவு, அவரவர் தரத்திற்கு தகுந்தபடி இந்தப் பிரச்சனையை ஊதி விட ஆரம்பித்தனர். கண்ணியமான கலைஞர் பேச்சையும், ஒட்டுமொத்த கட்சிகள் இயற்றிய தமிழக சட்டமன்ற தீர்மானத்தையும் திரித்து, துரும்பை மலையாக்கி மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
ஆனால் இப்போது மருத்துவர் ராமதாஸின் இன்னொரு வினாவான கர்நாடக தேர்தலுக்கு பிறகு ஒகேனக்கல் திட்டம் நிறைவேற உத்தரவாதம் உண்டா? என்ற மில்லியன் டாலர் சந்தேகத்திற்கு தான் தகுந்த பதில் அளிக்க யாரும் இல்லை. ஏனெனில் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணா முன்பே சொல்லிவிட்டார் தாங்கள் உச்ச நீதிமன்றம் போகப்போவதாக. வேறு எந்த கட்சி வந்தாலும் தாராளமாக தண்ணீர் தருவதற்கு ஒப்புக் கொள்வார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் காவிரி பிரச்சனையை என்றும் அணையாமல் வைத்துக் கொண்டால்தான் கர்நாடகாவில் எந்தக் கட்சியும் அரசியல் நடத்த முடியும் என்பதே நிதர்சனம்.
நமது முதல்வர் கலைஞர் அவர்கள் அவரது பெயருக்கேற்றபடி கருணையின் வடிவாய் மாறி வருகிறார், கனிந்து விட்டார், வன்முறைகள், வல்லடி வழக்குகள் அவருக்குப் பிடிப்பதில்லை. ஆனால் சட்டசபையில் அனைத்துக் கட்சியினராலுமே ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பின் இதைக் கண்டித்து அனைத்து திரை உலகமே திரண்டு போராட்டம் நடத்திய பிறகும், ரஜினிகாந்த் இத்தனை தீவிரமாய் தனது உணர்வை வெளிக்காட்டிய பின்பும், தேர்தலுக்கு பின் பேசி முடிவெடுப்போம் என அறிவித்தது சிறிது நெருடலாகத்தான் இருக்கிறது. வன்முறையை இருபுறமும் தடுக்கவும், மீண்டும் மீண்டும் மக்கள் உணர்ச்சியை தூண்டக்கூடாது என்றும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினாலும், சிறிது கவலையாய் தான் உள்ளது. மகாத்மா காந்தி கூட தனது வாழ்க்கையில் வன்முறையை தவிர்க்க இத்தகு விட்டுக்கொடுத்தலை செய்திருக்கிறார். ஆனால் அவரது மாண்பை இருபுறமும் மதித்தனர். வன்முறை நின்ற பின் நியாயமாக என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தது. ஆனால் கர்நாடகத்திடம் இந்த நியாயமான போக்கை நாம் எதிர்பார்க்க இயலுமா?
காவேரி பிரச்சனையையே எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நீண்ட வரலாறு பல தலைமுறைகளையும் கடந்து இன்னும் தொடர்கிறது. அது பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

இந்த காவேரி பிரச்சனையின் வரலாறு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி இருக்கிறது. கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன் கூட குடகில் அணை கட்டமுயன்றபோது படையெடுத்துச் சென்று அதை இடித்து விட்டு வந்ததாக உறுதி செய்ய இயலாத சரித்திர குறிப்புகள் உள்ளன.
மேலும் பலமுறை இவ்வாறு காவேரியைப் பாதுகாக்க தமிழக மன்னர்கள் குடகுக்கு சென்று அணை கட்டுவதை தடுத்து வந்துள்ளனர்.

1790ல் திப்பு சுல்தான் அரசாண்டபோது ஒரு அணை கட்ட எண்ணியபோது, அன்றைய நிலையில் தமிழ்நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலும், குடகு நாடு திப்பு சுல்தானிடமும் இருந்தது. இந்த அணை கட்டுவதற்கு பிரிட்டிஷ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

மறுபடியும் 1850ல் நடந்த ஒரு முயற்சியும் பிரிட்டானிய ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் 1918ல் மைசூர் மாநிலம் நேரடியாக லண்டனில் சமரசம் பேசி அங்கு அணை கட்ட அனுமதி வாங்கினர். ஆனால் தமிழ்நாடும் லண்டனில் மேல் முறையீடு செய்தது, மீண்டும் பலமுறை பேச்சு வார்த்தைக்கு பிறகு ஒரு சமரசம் எட்டப்பட்டு, அணை கட்டுவதற்கான முதல் ஒப்பந்தம் 1924ல் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தப்படி புதிய டேம் கொள்ளளவு 45 tmc ft ஆக இருக்க வேண்டும், ஆனால் மேட்டூர் அணைக்கு 95 tmc ft தந்துவிட வேண்டும். மேலும் கர்நாடகா இந்த அணையைக் கொண்டு ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேல் விவசாயத்திற்காக நிலங்களை சீர்திருத்தி உபயோகிக்க கூடாது. ஆனால் தமிழ்நாட்டிற்கு இந்த நிபந்தனை இல்லை. அது எத்தனை ஹெக்டேர் வேண்டுமானாலும் இந்த காவேரி நீரை உபயோகித்து விவசாயம் செய்யலாம். இவ்வாறு சுமுகமாக நாம் சுதந்திரம் பெறும்வரை 1947 வரை இந்த ஏற்பாடு தொடர்ந்தது.
ஆனால் அதற்கும் ஆபத்து வந்தது நாம் சுதந்திரம் பெற்ற பின்பு. சுதந்திரம் பெற்ற பிறகு புதிய ஆட்சி டெல்லியில் மலர்ந்ததும் கர்நாடகா தனக்கு காவேரியில் 50 சதவிகித நீர் வேண்டும் என மீண்டும் மத்திய அரசை வற்புறுத்தத் தொடங்கியது. ஆனால் 1947 முதல் 1974 வரை தமிழக அரசின் இடைவிடாத எதிர்ப்பால் கர்நாடக தரப்புக்கு ஆதரவாக எதுவும் நடைபெறவில்லை. ஆனால் 1974ல் கர்நாடகா அணைகளை கட்டத் தொடங்கியது. தமிழக அரசு நதிநீர் ஆணையத்திடம் முறையிட்டு விசாரிக்கக் கோரியும் அந்த ஆணையமும் விசாரித்து 1991ல் தனது இடைக்கால நிவாரணமாக தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 205 tmc ft தண்ணீர் தர வேண்டும் என்று கூறியது. ஆனால் கர்நாடகாவின் பங்கு குறித்து கூறப்படவே இல்லை.
ஆனால் இந்தத் தீர்ப்பை கர்நாடகா மதிப்பதேயில்லை. ஒவ்வொரு ஆண்டும், வறட்சி காலங்களில் கர்நாடகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதனிடம் தண்ணீர் விடச் செய்வதற்கு தமிழக அரசு பல உபாயங்களை உபயோகிக்கும் நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை. நமக்கு விதிப்படி கிடைக்க வேண்டியதை நாம் ஒவ்வொரு முறையும் போராடியே பெற்றோம்.
இந்த நிலையில் இந்த ஆணைய தற்காலிக தீர்ப்பும் காலாவதியானதால் நாம் உச்சநீதி மன்றம் செல்ல வேண்டி இருந்தது. இருதரப்பும் தங்கள் பக்க நியாயங்களையும், உரிமைகளையும் எடுத்துரைத்தன. இறுதியாக 2007ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது. அதில் தமிழகத்திற்கு 192 பிலியன் கன அடி தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தரவேண்டும் எனவும், கர்நாடகா மேலும் தனியாக கேரளாவிற்கு 30 பிலியன் கன அடியும், புதுவை மாநிலத்திற்கு 7 பிலியன் கன அடி தண்ணீரும் ஒவ்வொரு ஆண்டும் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த நீதிமன்ற தீர்ப்புக்கும் கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் பல தந்திரங்களை செய்து இன்னும் உச்சநீதி மன்ற தீர்ப்பு கர்நாடகாவால் மதிக்கப்படவேயில்லை.
நமது கவலை எல்லாம் இது தான். நமக்கு வரலாறு தெரிவித்ததெல்லாம், இதுவரை எந்த நதிநீர் ஆணையம், உச்சநீதி மன்ற தீர்ப்புகளையும் கர்நாடகா மதித்ததே இல்லை. இந்த நதிநீர் பிரச்சனையில் தொடர்ந்து பெங்களூரில் வாழும் அப்பாவி தமிழர்களும், டெல்டா பகுதியில் காவேரியை நம்பி விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
நமக்கு இதுவரை இரண்டு தமிழர்கள் இந்தியாவின் முதல் குடிமகனாக பதவியேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பெருமகன்களும் இந்தப் பிரச்சனையை முனைந்து தீர்த்திருக்கலாம். அவர்கள் பதவிக்காலங்களும் முடிந்துவிட்டன. இனி எப்போது ஒரு தமிழருக்கு இப்பதவி கிடைக்கும் எனத் தெரியாது.
சர்வதேச நீதியின்படி நதி உற்பத்தியாகும் இடத்திற்கோ, அது இருக்கும் நாட்டிற்கோ மட்டும் சொந்தமானதல்ல. இது உலகெங்கும் நடைமுறையில் இருக்கும் நியதி. அது பிறக்கும் இடத்திற்கு சிறிது உரிமை உண்டே தவிர, அது பிறந்த இடத்திற்கு மட்டும் சொந்தமில்லை. அது எங்கே பரவி ஓடுகிறதோ எங்கே சென்று கடலில் சேருகிறதோ அந்த இயற்கை வழியில் உள்ள அனைவருக்கும் அந்த நதிநீரில் மிகுந்த பங்கும் உரிமையும் உண்டு. இதை இந்திய உச்ச நீதிமன்றமும், பல சர்வதேச நீதிமன்றங்களும் பல்வேறு நாட்டில் வந்த பல நதி தாவாக்களுக்கும் தீர்வாக கூறியுள்ளன.
ஆனால் கர்நாடகம் மட்டும் முதலில் இருந்தே காவேரி குடகில் உற்பத்தி ஆவதால், காவேரி கர்நாடகாவிற்கு மட்டுமே உரியது என நினைக்கின்றனர். இதோ மே மாதம் கர்நாடகா தேர்தல், இங்கே வறட்சி ஆரம்பித்து விடும், நமது வயல்கள் நீருக்கு ஏங்க ஆரம்பித்து விடும். என்ன செய்யப் போகிறோம்?
மேலும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 1998லேயே கர்நாடக-தமிழகத்திற்கு இடையே கையெழுத்தான திட்டம். மைய அரசின் அனுமதி பெற்று, இடையே ஆட்சி மாற்றத்தால் புறக்கணிக்கப்பட்டு இப்போது மீண்டும் இந்த ஆட்சியில் புத்துயிர் பெற்று ஜப்பானிடம் 1300 கோடி கடனும் பெற்றாகிவிட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் அமையப் போகும் அரசு இத்திட்டத்திற்கு அனுமதியளிப்பார்களா?
(1) முன்பே அனுமதி பெற்ற திட்டத்திற்கு மீண்டும் ஏன் அனுமதி?
(2) இதுவரை இத்திட்டத்தை தடுக்க எந்த நீதிமன்ற ஆணை இல்லை. ஆனால் எஸ்.எம்.கிருஷ்ணா (காங்கிரஸ்) உச்சநீதி மன்றம் போவதாக கூறுகிறார். நீதிமன்றம் சென்றால் இந்த திட்டம் மிக தாமதம் ஆகும். தடை இல்லாத போதே செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
எனவே கலைஞர் கருணாநிதி கருணை உள்ளத்தோடு அமைதி வேண்டி பெருந்தன்மையோடு கூறினாலும், நாம் கர்நாடகாவை நம்பி மீண்டும் ஒகேனக்கல் திட்டத்திலேயும் ஏமாந்து நீதிமன்ற சிக்கலில் மாட்டினால் இதுவும் தலைமுறை தலைமுறையாக தொடரும்.
நாம் இப்போது ஒகேனக்கல் திட்டத்திற்கு எடுக்கப்போவது வெறும் 2 tmc ft தான், இதற்கு முன்பே அனுமதி வாங்கியாகி விட்டது, நீதிமன்ற தடை இப்போது இல்லை. எனவே விரைந்து நமது பிரச்சனையை நாம் பார்த்துக் கொள்வதுதான் உசிதம். தேர்தல் கர்நாடகாவில் தான். பின்பு தமிழகத்தில் தேர்தல் வரும். நமக்காக அவர்கள் ஏதாவது விட்டுக்கொடுக்கப் போகிறார்களா? இது ஸ்டாலின் போன்ற செயல்திறம் மிக்க இளைஞர்கள் முன்வந்தால்தான் முடியும்.
நடந்தாய் வாழி காவேரிநீயும் பின்னால் நட ஒகேனக்கல்என்று ஆகிவிடாமல் இருந்தால் சரி.

No comments: