Thursday, April 10, 2008

உலகின் மிகப் பெரிய வைரம் புதுவைக்கு அருகில் உள்ள இரும்பை ஆலயத்தில் திருடப்பட்டதா? ---சுகுஜி


உலகின் மிகப் பெரிய வைரம் புதுவைக்கு அருகில் உள்ள இரும்பை ஆலயத்தில் திருடப்பட்டதா? ---சுகுஜி


உலகின் மிகப்பெரிய ஆர்லோப் என்ற கருப்பு வைரம் புதுச்சேரிக்கு அருகில் உள்ள இரும்பை கோயிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. பிரம்மாவின் கண் என்று அழைக்கப்படும் இந்த வைரம் சென்ற நூற்றாண்டில் வழிபாட்டில் இருந்து வந்த ஆலயத்துள் இருந்த விக்ரகத்தின் 'கண்' ஆக இருந்ததை, தந்திரமாக திருடப்பட்டதாக நம்பப்படுகிறது.
புதுவைக்கு அருகில் சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது இரும்பை ஆலயம். இது புதுவை திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு அருகில் இரும்பைக்கு போகும் கிளை சாலையில் உள்ளது.
இது சுமார் 1300 வருடங்கள் பழமை வாய்ந்த கோயில். முன்பு இரும்பை மாகாணம் என்று அழைக்கப்பட்ட எழில் சூழ்ந்த ஊர் தற்போது இரும்பை என்று அழைக்கப்படுகிறது.

இந்த இரும்பை தலத்திற்கு திருஞானசம்பந்தர் வந்திருக்கிறார். திருஞானசம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு. அவருக்கு முன்பே இந்த ஆலயம் புகழ்பெற்றிருந்ததால் தான் அவர் அங்கே வந்து இறைவனை வழிபட்டு பாடி உள்ளார். எனவே இதன் தொன்மை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எனக் கொள்ளலாம்.
திருஞானசம்பந்தர் இந்த இரும்பை மாகாணத்தைப் பற்றி தனது திருபதிகங்களில்"எந்தை எம்மான் இடம் எழில்கொள்சோலை இரும்பைதனுள் மந்தமாய் எழில்சோர்ந்துஅழகாறு மாகாணத்து" என்று பாடுகிறார். அதாவது அழகிய வனத்தில் அமைந்துள்ள இரும்பை மாகாணத்தில் உள்ள அனலை தாங்கிய அண்ணலை வழிபடுவோருக்கு துன்பம் இல்லை என்கிறார்.
இதன் மூர்த்தி -- மகா காளேஸ்வரர்அம்மை -- மதுரநாயகி எனப்படும் குழல்மொழி அம்மைதலமரம் -- புன்னைமகாகாளர் மூன்று இடங்களில் ஆராதிக்கப்படுகிறார். முதலாவது உச்சைனி ஜோதிர்லிங்கம், இரண்டாவது அம்பை சோழநாட்டில், மூன்றாவது இத்திருத்தலம். இதன் தீர்த்தம் - மாகாளர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
இதில் சந்திரனுக்கு தனி சந்தநி உண்டு. ஒரு கையில் புத்தகமும், இருகையில் தாமரையும் ஒரு கை இடுப்பிலும் உள்ள எழிலார்ந்த உருவம். இத்தகைய சந்திரன் சிலை மிக அபூர்வமே. சந்திரன் நீச்சமாக உள்ள விருச்சிக ராசிக்காரர்கள் தொடர்ந்து 8 வாரம் திங்கள் அன்று வழிபட, சந்திரதோஷம் நீங்கும் என கூறப்படுகிறது.
இந்த தலத்தில் மூர்த்தியாக உள்ள மகாகாளேஸ்வரரின் லிங்கரூபம், மூன்று பிளவாக பிளந்துள்ளது. இதை ஒரு செப்பு பட்டையால் பிணைத்து கட்டி உள்ளனர். இந்த லிங்கம் பிளவு பட்டிருப்பதே இந்த லிங்கத்தின் கண்ணாக அமைக்கப்பட்டிருந்த வைரம் களவாடப்பட்டதற்கு சான்று என கூறுகிறார்கள்.
ஆனால் ஆகம விதிகளை சாந்தி செய்ய அதற்கும் ஒரு சுவாரஸ்யமான கதை கூறப்படுகிறது.
நான்காம் குலோத்துங்கன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில், இந்தப் பகுதியில் பயங்கர பஞ்சம் ஏற்பட்டதாகவும், இதை தீர்க்க வழியறியாத மன்னன் கற்றவரை நாடிய போது, தொடர் தவத்தில் ஈடுபட்டிருந்த கழவெளி சித்தர் என்பவர் இரும்பை மாகாணத்தில் நாள் ஒன்றுக்கு ஒரே ஒரு அரச இலையை உண்டு அரசமரத்தின் அடியில் தவம் செய்வதாகவும், அவரால் மட்டுமே இந்த பஞ்சம் உள்ள நிலையை மாற்ற இயலும் என்றனர்.
ஆனால் தவத்தில் ஆழ்ந்துள்ள முனிவரை எவ்வாறு எழுப்பி அவரிடம் குறையை கூறுவது, ஒருவேளை அவர் கோபித்தால் என்ன செய்வது என்று மன்னர் தயங்கும்போது, இரும்பையை சேர்ந்த தாசி வள்ளி என்பவள் தான் முனிவரை எழுப்பி வருவதாகவும், அவர் சபித்தால் அது தன்னோடு போகட்டும் என தியாக உள்ளத்துடன் கூறி சித்தரை சந்திக்க சென்றாள்.
முனிவரின் உணவுப் பழக்கங்களை அறிந்த வள்ளி ஒரு அரச இலையைப் போன்று 'அப்பளப்பூ' ஒன்று செய்து வைத்து காத்திருந்தாள்.
முனிவர் பசிவந்தபோது அரசமரத்தின் பழுத்த இலைக்காக வலது காயை உயர்த்தினார். தனது கண்களை திறக்காமல், வழக்கம்போல. அப்போது அவரது வலது கையில் அரச இலைக்கு பதிலாக அப்பளப்பூவை தாசி வள்ளி வைத்தாள்.
சுவை வேறுபாட்டை உணர்ந்த கழவெளி சித்தர் கண் திறந்தார். உடன் அவரை வணங்கி தனது நாட்டின் பஞ்சத்தை போக்குமாறு பணிவுடன் வள்ளி வேண்டினாள். சித்தரும் வரும் ஐந்தாவது விழா நாளில் தான் இறைவனை வேண்டி பஞ்சம் நீங்க வழி செய்வதாக ஒப்புக் கொண்டார்.
ஐந்தாம் நாள் திருவிழாவில் தாசி வள்ளியின் நடனம் நடைபெற்றது. அப்போது அவளின் வலது கால் சிலம்பு கழன்று விழுந்தது. ஆட்டத்தை ஒற்றை சிலம்புடன் ஆடுவது குற்றம் என எண்ணிய சித்தர் தன் கரத்தால் தாசியின் காலில் சிலம்பை இட்டு விட்டார்.
ஆனால் மக்களோ இதைக் கண்டு பலமாக நகைத்தனர். உடன் கோபம் கொண்ட சித்தர்வெல்லும்போது விடுவேன் வெகுளியைசெல்லும்போது செலுத்துவேன் சிந்தையைஅல்லும் பகலும் உன்னையே தொழுவேன்கல்லும் பிளந்து கழிவெளி ஆகுமே எனப்பாட லிங்கம் மூன்றாய் பிளவுபட்டது.
இதைக்கண்டு திடுக்கிட்ட மக்களும் மன்னரும் முனிவரை பணிந்து வேண்ட"எட்டும் இரண்டும் அறிந்த எந்தனைஎட்டும் இரண்டும் அறிந்த உந்தனைஎட்டும் இரண்டும் ஒன்றதாகுமே" எனகோபம் தணிந்து பாட லிங்கத்தின் இரண்டு பகுதி மட்டும் கூடியதாகவும், மூன்றாவது பகுதி விழுந்த இடம் இன்றும் கழிவெளி என அழைக்கப்படுவதாகவும் இந்தக் கதையை மிக சுவாரசியமாக அங்கே அர்ச்சகராக பணிபுரியும் பஞ்சாபகேசன் குருக்கள் நம்மிடம் தெரிவித்தார்.
ஆனால் வைரம் பறிபோனதால் பின்னப்பட்டுபோன லிங்கத்தின் குறை போக்கவே இந்தக் கதை கூறப்பட்டிருப்பதாக நமக்கு தோன்றுகிறது.
இங்கு உற்சவங்கள் எதுவும் கிடையாது. சிவராத்திரி, பிரதோஷம் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.
சீரழிந்து மக்களால் மறக்கப்பட்டிருந்த இந்தக் கோயிலை புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார், மிகுந்த பொருள் செலவுடன் அதை புனரமைத்து வருகிறார். அதில் அமைக்கப்பட்டுள்ள கதை சிற்பங்களும், சித்திரங்களும் புதிய வகையானவை. கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் வனப்பு கொண்டவை.
இத்தகைய வகை சித்திரங்கள் தமிழகத்தில் எந்த ஆலயத்திலும் இடம்பெறவில்லை என்று கூறலாம்.
திருஞானசம்பந்தர் பாடியபடி ஏழாம் நூற்றாண்டில் இரும்பை இருந்த நிலை ஒப்ப தக்கதொரு வனமாகவும் ஆக்கப்பட்டு வருகிறது.
திருக்குளமும் சீராக்கப்பட்டு வருகிறது. கழுவெளி சித்தர் தவமிருந்ததாக கூறப்படும் அரசமரமும் ஒன்று குளக்கரையில் உள்ளது.
விரைவில் குடமுழுக்கு நடக்க இருக்கிறது. விரைவிலேயே இந்தத்தலம் ஒரு சிறந்த வழிபாட்டு தலமாகவும், சுற்றுலா தலமாகவும் மாற இருக்கிறது.
ஒருமுறை சென்று வனப்பையும், மகாகாளேசுவரரின் அருளையும் பெற்று வரலாமே.



No comments: