Sunday, April 27, 2008

பொதுவுடமையும் பாரதியும்



பொதுவுடமையும் பாரதியும்
--சுகுஜி

பொது உடமை சித்தாந்தம் நமது தமிழ்நாட்டிலே சங்க காலம் முதல் வழக்கில் இருந்து வந்த ஒன்றாகும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனார், இந்திர லோகத்து அமுதமே கிடைத்தாலும் தமக்கென உண்ணமாட்டார்கள், பிறர்க்கு கொடுத்தே உண்பார்கள் என கூறியிருக்கிறார்.
வள்ளுவர் கூட சாகாத அமுதமே ஆனாலும் விருந்தினர் காத்திருக்கையில் தனியே உண்பது ஆகாது என்று கூறுகிறார். மேலும் தீவிரமாக "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்" என்று பிறரிடம் பொருள் பெற்று வாழ வேண்டிய நிலையில் ஒருவன் இருக்க நேரிட்டால் இந்த உலகை படைத்தவன் அழியவேண்டும் என சினந்து கூறுகிறார்.

அதாவது இரந்து வாழும் சூழலில் ஒருவன் இருப்பது அவனது தவறல்ல, இந்த சமுதாயத்தின் கடமை அவனையும் பராமரிப்பது ஆகும். அவனுக்கு சேரவேண்டிய வாய்ப்போ, செல்வமோ ஏதோ ஒன்று மற்றவரால் சுரண்டப் படுவதால் தான் அவன் இரந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.
அது அவனின் குற்றம் அல்ல. உழைத்தும் ஊதியம் கிடைக்காமையோ அல்லது உழைக்க வாய்ப்போ கிடைக்காதது ஒரு வகைச் சுரண்டல்தான்.
உலகியற்றியான் என வள்ளுவர் குறிப்பிடுவது கடவுள் என்பதை ஒப்புக் கொள்ளாதவர் 'அரசு' என்றோ 'ஆள்பவர்' என்றோ பொருள் கொள்ளலாம். ஆனால் வள்ளுவர் இரப்பவரை குறை கூறவில்லை என்பது தான் இதில் நோக்கத்தக்கது. சுரண்டலுக்கு எதிராகத்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கொதித்து எழுகிறார்.
காரல் மார்க்ஸின் தத்துவங்களைப் போற்றி சித்தாந்தமாக்கி லெனின் போன்றவர்கள் நாட்டையே மாற்றிக் காட்டினார்கள். ஆனால் நாமோ வள்ளுவரை புகழ்ந்து மட்டுமே 2000 ஆண்டுகளாக பேசி வருகிறோம். பொதுவுடமை நமது நாட்டில் வேரூன்ற இயலவில்லை.
ஆனால் வள்ளுவர் வழிகாட்டவில்லை, மார்க்ஸ் அறிவியல் அடித்தளத்தில் விளக்கிக் காட்டினார். சமீபத்தில், வள்ளுவர் காலத்தில் இப்படி அவரது குறளுக்கும் அதை அடைவதற்கான வழிமுறைகள் விளக்கி நூல்கள் இருந்தனவா எனத் தெரியவில்லை. சுரண்டலை ஒழிப்பதற்கு வர்க்க போராட்டம்தான் ஒரே வழி என விஞ்ஞான பூர்வமான சமதர்மத்திற்கு வழிகாட்டப்பட்டது காரல்மார்க்ஸின் 'மூலதனம்' நூல் வந்ததற்கு பிறகுதான்.

பாரதி வாழ்ந்த காலத்திலே நாம் பிரிட்டிஷ்காரர்களால் படுபயங்கரமாக சுரண்டப்பட்டு இருந்தோம். சுரண்டலின் கரங்களால் இந்தியா தெறிபட்டுக் கிடந்தது. அப்போது தான் அவர் ஆன்மீக நெறியில் திளைத்திருந்த காலம். எனவே புரட்சிதனையும் மகாகாளி நிறைவேற்றி வைத்தாள் என புரட்சியை காளியாக உருவகப்படுத்துகிறார். நம் இந்திய நாட்டையும் பாரதமாதா என்று பெண்மையின் சக்தியாக நினைத்து அதற்கும் ஒரு உருவம் செய்தவர் மகாகவி பாரதியார் தான்.
சுரண்டலைக் கண்டு மனம் நொந்த பாரதி, அதற்கு இரண்டு காரணமே என்று நினைத்து அவைகளை வலிமையாக எதிர்க்கிறார், ஒன்று வறுமை. மற்றொன்று அறியாமை.
எனவே இவரும் வள்ளுவரைப் பின்பற்றி "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழிப்போம்" என்றார். இவர் பக்தி மார்க்கத்தில் இருந்ததால் வள்ளுவரைப்போல் உலகைப் படைத்தவரை சாடாமல் இந்த உலகத்தையே அழிப்பதாக கூறுகிறார்.
அறியாமையைப் பற்றிப் பாடும்போது கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் காரணங்கள் இவை எனும் தெளிவும் இலார் என்று வருத்தப்படுகிறார்.
விடுதலையைப் பற்றிக்கூறும்போது கூட சமத்துவத்தைப் பற்றி கூறுகிறார். தனிமனித சுரண்டலை மனதில் கொண்டு "பறையருக்கும் இங்கு புலையருக்கும் விடுதலை" என அடித்தட்டு மக்கள் சுரண்டலில் இருந்து விடுபட வேண்டும் என்று பாடுகிறார். பாரதியும் விடுதலையை மட்டும் பாடாமல் சுரண்டலுக்கு எதிராகவும் கொதித்தெழுந்தார். இந்திய நாட்டில் தனிமனித சுரண்டல் சாதீய முறையினால் ஒருபுறம், அன்னியரின் சுரண்டல் ஒருபுறம் தலைவிரித்தாடியது. இந்தியாவிலுள்ள மூலப்பொருள்களும், செல்வங்களும் கவர்ந்தெடுக்கப்பட்டு, வெளிநாட்டில் பொருள்களாக உற்பத்தி செய்து அதை விற்பதற்கான சந்தைக்களமாக இந்தியாவை அன்னியர் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்த நிலையில் தான் மக்கள் கவிஞரான பாரதி தனி மனித சுரண்டலை எதிர்த்து "மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ" எனவும் "மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ" என குரல் கொடுத்தார். அன்னியரின் சமுதாய சுரண்டலை எதிர்த்து "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ! நாங்கள் சாகவோ! அழுது கொண்டிருப்போமோ! ஆண்பிள்ளைகள் அல்லமோ! உயிர் வெல்லமோ! நாங்கள் முப்பது கோடி சணங்களும் நாய்களோ பன்றிச் சேய்களோ மற்று நீங்கள் மட்டும் மனிதர்களோ!" எனக் குமுறினார்.
சோவியத் நாட்டிலே ஏற்பட்ட புரட்சியை அறிகிறார் பாரதி, மகிழ்கிறார் "மகாகாளி ரஷ்யாவில் கடைக்கண் வைத்தாள் ஆகா என எழுந்தது யுகப்புரட்சி" என்று கும்மாளமிடுகிறார்.
சமத்துவ வாழ்வையே விடுதலையாக எண்ணிய பாரதியார் "வாழி கல்வி செல்வம் எய்தி மனம் மகிழ்ந்து கூடியே மனிதர் யாவரும் ஒரு நிகர் சமானமாக வாழுவோமே" என்று கூறுகிறார்.
மனிதர்களை மட்டும் கூறாமல், சமத்துவமாக "காக்கை குருவிகளும் எங்கள் ஜாதி நீள்கடல் மலையும் எங்கள் கூட்டம்" என உயிர் அற்ற கடலும், மலையும் கூட எங்கள் கூட்டம் என்கிறார்.
பாரதியின் பன்முகத்தன்மையும் அவர் கூறிய சித்தாந்தங்களும், வேதாந்தங்களும் இன்னமும் தீவிரமாக ஆராயப்படல் வேண்டும். பாரதி ஒரு சுதந்திரத்திற்காகப் பாடிய கவிஞர் அல்லர். மன்னர்களைப் புகழ்ந்து பாடிய புலவரும் அல்லர். அவர் ஒரு மக்கள் கவிஞர், தன்னைச் சுற்றி நடப்பவை ஒவ்வொன்றையும் பார்த்து, அநீதிகளைக் கண்டு கொதித்தெழுந்து விடுகிறார். படித்தவர் தப்பு செய்தால் அய்யோ என்று போவார் என்கிறார். அநீதியைக் கண்டு கொதித்தெழாவிட்டால் கல்வி கற்றதற்கு என்ன பொருள்?

No comments: