Wednesday, May 14, 2008

செய்திகள் மே 14 காலை 7.30 மணி


ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பு: 60 பேர் சாவு
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை இரவு 12 நிமிஷங்களுக்குள் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 60 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஜெய்ப்பூரில் இப்படியொரு தாக்குதல் நடைபெறும் என்பதை மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸôர் எதிர்பார்க்கவில்லை என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. கார் மற்றும் துணிக்கடையில்... நகரின் கோட்வாலி பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் அருகிலும், இப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலும் குண்டுகள் வெடித்தன. நகரின் திரிபோலியா பஜாரில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த நிலையில் இங்கும் குண்டு வெடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். மேலும் இந்நகரிலுள்ள ஹனுமார் கோயில் அருகிலும், மானஸ் செüக், படி செüபல், சோட்டி செüபல், ஜோஹரி பஜார் ஆகிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. முதல் குண்டுவெடிப்பு இரவு 7.40 மணிக்கு நிகழ்ந்தது.ஜெய்ப்பூரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைடுத்து மத்திய உள்துறை அமைச்சகக் குழுவினர் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் இங்கு வந்துள்ளனர். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெய்ப்பூரில் நிகழ்ந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவி முதல் வங்கி எஸ்பிஐ ஆஸி. நிறுவனத்துடன் ஒப்பந்தம்

10 ஆயிரம் கிளைகளுடன் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கிக்கு 10 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர் அது பொது காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐஏஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக இந்தியாவில் பொது காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும். புதிய நிறுவனத்தில் 74 சதவீத பங்குகள் எஸ்பிஐ வசமும், 26 சதவீத பங்குகள் ஐஏஜி வசமும் இருக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பொதுக்காப்பீட்டுத் துறையில் மிகச் சிறந்த வளர்ச்சியை எஸ்பிஐ எட்டும் என்று வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் தீபக் சாவ்லா தெரிவித்தார்.

காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளையைத் தொடங்க வேண்டும்-மு. ராமதாஸ்

இது சமந்தமாக எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைநகர் புதுச்சேரியில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் காரைக்கால் அமைந்துள்ளது. அண்மையில் மாவட்டமாக அறிவிக்கப்பட்ட காரைக்காலில் 1.72 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். காரைக்காலில் பல கிராமங்கள் இருக்கின்றன. காரைக்காலின் பொருளாதார மற்றும் சுகாதார குறியீடுகள் அடிப்படையில் பார்க்கும்போது காரைக்கால் மற்ற பிராந்தியங்களைக் காட்டிலும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
தற்போது மாநில அரசு நடத்தும் பொது மருத்துவமனையின் வாயிலாக அடிப்படை மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதயநோய், நரம்பியல் துறை, அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகளுக்கு காரைக்கால் மக்கள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மருக்குதான் செல்ல வேண்டியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 47-க்கு அருகில் காரைக்கால் அமைந்துள்ளதால் அது ஒரு விபத்து நிறைந்த பகுதியாக இருக்கிறது. விபத்தில் இருந்து மக்களுக்கு உடனடியாக மருத்துவ சேவை அளிக்கக் கூடிய வசதி அங்கு இல்லை. எனவே ஜிப்மரின் சிறப்பு மையம் ஒன்றை காரைக்காலில் அமைக்க வேண்டும் என்று ஏற்கெனவே கேட்டிருந்தேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று காரைக்காலில் இந்த மையத்தை அமைக்க உறுதி அளித்தீர்கள்.
அந்த உறுதிமொழியின் தொடர்ச்சியாக அந்த பிராந்திய மக்களின் நீண்டகால கோரிக்கையான ஜிப்மரின் விரிவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இந்த மையத்தை முதன் முதலாக காரைக்காலில் ஒரு வாடகை கட்டடத்தில் தேவையான அடிப்படை நோய் கண்டறியும் வசதிகளோடு அமைக்கலாம்.
ஜிப்மரில் இருந்து மருத்துவ அதிகாரிகள் இந்த மையத்தை நிர்வகிக்க கேட்டுக் கொள்ளப்படலாம். சிறப்புத் துறை வல்லுநர்கள் வாரத்தின் ஒவ்வொரு நாளைக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து அந்த மையத்துக்குச் சென்று நோயாளிகளைப் பரிசோதித்து அவர்களைக் குணமடையச் செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கலாம், அவரச காலத்தில் அங்குள்ள நோயாளிகளை அந்த மையத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் மூலமாக ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடனடி சிகிச்சை அளிக்கலாம்.
இந்த மையத்தின் வாயிலாக ஏழை மக்களுக்கு காரைக்காலில் உயர்தர மருத்துவ சேவையை அளிக்கலாம். அதனால் ஒவ்வொரு முறையும் ஜிப்மருக்கு வந்து செல்லும் நேரம், சக்தி, பொருளாதாரம் வீணடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே இத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராமதாஸ்.


அம்பேத்கர் மணி மண்டபம் திறப்பு விழா மத்திய அமைச்சர் வராததால் ஒத்திவைப்பு

சமூநலத்துறை அமைச்சர் மு. கந்தசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி கடற்கரை சாலையில் புனரமைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் மணி மண்டபம் திறப்பு விழா இம் மாதம் 14-ம் தேதி திறப்பதாக இருந்தது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் அமைச்சர் மீராகுமார் இந்தத் தேதியில் வரவில்லை.
மத்திய அமைச்சரிடம் மறு ஒப்புதல் கிடைத்தவுடன் இன்னொரு தேதியில் திறப்பு விழா நடைபெறும் என்று அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதுவை பஞ்சாலை தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் - முதல்வர்அறிவுப்பு

புதுச்சேரி ஏ.எப்.டி. பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 அளிக்கப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்நிலையில் தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் என்று சுதேசி, பாரதி, கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமியுடன் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் புதுச்சேரி சுதேசி, பாரதி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.750-ம், திருபுவனை கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளர்களுக்கு ரூ.600-ம் இடைக்கால நிவாரணமாக அளிக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

No comments: