Sunday, May 18, 2008

செய்திகள் மே 18 காலை 7.15 மணி

ஆஹா ! ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை, இன்னும் ஒரு வாரத்தில் குறையும்
ஓட்டல்களில் இட்லி, தோசை, பொங்கல், டீ, காபி உள்ளிட்ட
உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டல்கள் உணவுப்
பொருட்களின் விலை, இன்னும் ஒரு வாரத்தில் குறையும் என்று
உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். தமிழக ஓட்டல்கள் சங்க
நிர்வாகிகளுடன் உணவு அமைச்சர் எ.வ.வேலு, கோட்டையில் நேற்று
ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:
சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியைக் குறைத்தல்,
ஆன்லைன் வர்த்தகம் தடை செய்தல், விலை ஏற்றத்தை தடுத்தல் உள்ளிட்ட
அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாமர மக்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள், தொழிலாளர்கள், வெளியூர்களிலிருந்து சென்னைக்கு
தினந்தோறும் வந்து செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் உள்ளிட்டோருக்கு
உணவகங்கள்தான் உயிர்நாடி.
இட்லி, வடை, பூரி, பொங்கல் போன்றவை அன்றாடம் பொதுமக்கள்
விரும்பி உண்ணும் உணவு. இவற்றின் விலை உயர்வை உடனடியாகக்
கட்டுப்படுத்த வேண்டும். 1976ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த
சில கடுமையான சட்டங்களை போல அரசு மீண்டும் சட்டம் இயற்றக்
கூடிய நிலையை உணவகங்கள் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறு
அமைச்சர் வேலு பேசினார். இதையடுத்து, ஓட்டல்
உரிமையாளர்கள் உடனடியாக உணவுப் பொருட்களின் விலையைக்
குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரிடம் உறுதியளித்தனர். குறைக்கப்பட்ட விலைப் பட்டியலை அரசிடம் தருவதாக
கூறியுள்ளனர். இந்த கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் சண்முகம், உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜாராம், தமிழ்நாடு ஓட்டல்கள்
சங்கத் தலைவர் வசந்தபவன் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிதம்பரத்தின் பேச்சை கேட்ககானோம் ! பணவீக்க விகிதம் கிடுகிடு உயர்வு
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாட்டின்
பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை
உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை
எடுக்கிறது. நாட்டின் பணவீக்க விகிதம் இந்த மாதம் 3ம் தேதியுடன் முடிந்த
வாரத்தில், கடந்த 44 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக
7.83 சதவீதத்தைத் தொட்டது. இதற்கு முன் 2004 செப்டம்பர் 11ல்
7.87 சதவீதமாக இருந்ததுதான் அதிகம்.
இறக்குமதி வரிச் சலுகைகள், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை
அறிவித்து வருகிறது. எனினும், பணவீக்கம் குறையவில்லை என்பதை
கடந்த 3ம் தேதி நிலவரம் காட்டுகிறது. கடந்த 44 மாதங்களில் இல்லாத
அளவுக்கு பணவீக்க விகிதம் தற்போது 7.83 சதவீதத்தைத்
தொட்டுள்ளது. இதற்கு முன் 2004 செப்டம்பர் 11ம் தேதி பணவீக்கம் 7.87
சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களைப்
பொருத்தவரை, காய்கறி, பழங்கள் விலை 3 சதவீதமும், காபி 6
சதவீதமும், சோளம் 4 சதவீதமும், மசாலாப் பொருட்கள், பயறு வகைகள்
1 சதவீதமும் விலை உயர்ந்துள்ளன. கோதுமை மாவு, தேங்காய் எண்ணெய்
போன்ற தயாரிப்பு பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதால்
பணவீக்கம் அதிகரித்தது. தொழிற்சாலை எரிபொருள்களான
நாப்தா, பர்னாஸ் எண்ணெய், இலகுரக டீசல் எண்ணெய்
ஆகியவற்றின் விலை உயர்வும் பணவீக்க உயர்வுக்கு காரணமாக
கூறப்படுகின்றன.
இந்த மாதத்துக்குள் பணவீக்கம் 8 சதவீதத்தைத் தொடலாம் என்று
பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்
குலை நடுங்க வைக்கும் குளோபல் வார்மிங். எதிர்கால சந்ததியினரையும் காப்பது நமது கடமை
உலகம் முழுவதும் பெருகிவிட்ட இருசக்கர, நான்கு சக்கர
வாகனங்கள் கக்கும் கார்பன் மோனாக்சைடு, தொழிற்சாலைகளில்
இருந்து வெளிவரும் நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் டெட்ரா
குளோரைடு, குளிர்சாதனங்களிலிருந்து வெளியாகும் பிரியான், குளோரோ
புளோரின்...என காற்று மண்டலத்தில் கார்பன் மற்றும் அதன் கூட்டு
வாயுக்களின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. பருவம் மாறி மழை கொட்டுது...திடீர் திடீரென்று புயல் காற்று அங்கங்கே பூமி குலுங்குது. கடல்
பொங்குகிறது...சமீபத்தில் சீனாவை உலுக்கியுள்ள பூகம்பம், மியான்மரை
புரட்டிப் போட்ட நர்கீஸ் புயல், கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த
திடீர் மழை.... இதெல்லாம் காலம் மாறிப் போனதுக்கு உதாரணம். . மேலும் காற்று மண்டலத்தில் கார்பன் வாயுத் தொகுதிகளின் அளவு
280 பி.பி.எம் (மில்லியனில் ஒரு பங்கு)தான் இருக்க வேண்டும்.
ஆனால் இன்றைக்கு 380 பி.பி.எம்மைத் தாண்டி விட்டது. இந்த
நூற்றாண்டின் இறுதியில் இது 800 ஆகிவிடும் என்று விஞ்ஞானிகள்
கணித்துள்ளனர். ஆனால் 500 பி.பி.எம்மைத் தாண்டினாலே நாம்
உயிர் வாழ முடியாது என்பது மற்றுமொரு ஆபத்து.
ஏனெனில் காற்றில் கார்பன் வாயுத் தொகுதிகள் அதிகமாகிவிட்டால்,
அதில் இருக்கும் கார்பன் மூலக்கூறுகள் அதிகப்படியான வெப்பத்தை உள்வாங்கி, அப்படியே திருப்பி தரும். இதனால் காற்று மண்டலம் வழக்கத்தை விட சூடாகிவிடும்.
ஆனாலும் ஓசோனில் ஓட்டைகள் விழுவது நின்றபாடில்லை. இதனால்
ஆர்ட்டிக், அன்டார்டிக் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக
உருகி வருகின்றன. விளைவு, கடல் மட்டம் அதிகரித்து, நிலப்பரப்பு
குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 5
மீட்டர் உயர்ந்து விடும். இதனால் 5 கோடி இந்தியர்கள் வீடுகளை
இழப்பார்கள். இந்தியாவில் கடற்கரை ஓரம் உள்ள பல நகரங்கள்
கடலுக்குள் சென்று விடும். குறிப்பாக சென்னை எண்ணூர் கூட கொஞ்சம்
கொஞ்சமாக கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள்
நிபுணர்கள். மறு புறம் உலக வெப்பமாதலால் கடல் நீர் ஆவியாகி செல்வதால், கடலில் வெற்றிடம் ஏற்பட்டு, அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உருவாகின்றன. மேலும் பருவம் தவறிய, குறைவான மழையளவு, முறையற்ற தட்ப வெப்பம், சுனாமி, பூகம்பம் என்ற தொடர் விளைவுகளும் ஏற்படும் என்கின்றனர் சூழலியல்
நிபுணர்கள். இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நம்மையும் எதிர்கால சந்ததியினரையும் காப்பது நமது கடமை. இந்த பேராபத்தில் இருந்து
மரங்கள் நம்மைக் காக்க முடியும். அவை நச்சு வாயுக்களை சுவாசித்து,
நமக்காக பிராண வாயுவை வெளியிடுகின்றன. எனவே இருக்கும் காடுகளைக் அழிக்காமல், காக்க வேண்டும். காடுகள் இருந்தால்
மண்வளம், மூலிகைகள், வன விலங்குகள், செழுமை, கூடுதல்
மழையளவு, இயற்கைப் பாதுகாப்பு என பல்வேறு நன்மைகள் உள்ளன. எதிர்கால சந்ததியினருக்காகவும் பூமியை நாம் விட்டுசெல்லவேண்டும் !
முதல்வர் கருணாநிதி குணமடைந்து வருகிறார் : மு.க.ஸ்டாலின் தகவல்
சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க சனிக்கிழமை அன்று வந்த மு.க.ஸ்டாலின் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதி குணமடைந்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் அவர் இல்லம் திரும்புவார்' என்று கூறினார்.
சமூகவிரோதிகளை ஒடுக்க இப்போதுள்ள சட்டங்களே போதும்': முதல்வர் என்.ரங்கசாமி
புதுச்சேரியில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த முதல்வர் என்.ரங்கசாமி புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கிறது. மற்ற மாநிலங்களை நோக்கும் போது சட்டம்- ஒழுங்கு பராமரிப்பில் புதுச்சேரி முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. புதுச்சேரியில் குண்டர் சட்டம் கொண்டு வருவது தொடர்பாகவும், தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாகவும் கேட்கிறீர்கள். இப்போதுள்ள சட்டங்களே போதுமானது. இச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார் முதல்வர்.

No comments: