Sunday, May 04, 2008

செய்திகள் மே 4 காலை 7.30

சென்னைக்கு வெளியே தொழில் தொடங்குவோருக்கு சலுகை: ஆர்க்காடு வீராசாமி
உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் சந்திப்பு குறித்த கருத்தரங்கு, இணையதள வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பேசிய விபரம் : மாநில அரசின் புதிய தொழில் கொள்கையின்படி, சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் ரூ. 350 கோடிக்கும் மேல் முதலீடு செய்தால் மின்சார கட்டணம், வாட் வரி, கடனுக்கான வட்டி விகிதம் ஆகியவற்றில் சலுகை அளிக்கப்படுகிறது.
கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற வெளிமாவட்டங்களில் முதலீடு செய்வோருக்கு இந்த வரம்பு ரூ. 250 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தவிர்த்து பிற இடங்களில் ரூ. 250 கோடி முதலீடு செய்தாலே இந்த சலுகைகளை வழங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் ரூ. 250 கோடி முதலீடுகு குறைவானாலும் சலுகை கிடைத்தால் தான் சாமன்யருகும் பலன் கிடைக்கும்

திருவாரூரில் இன்று ஆழித் தேரோட்டம் மிகப்பெரிய தேர்

இத் திருக்கோயிலின் முக்கியத் திருவிழாவாக பங்குனி உத்திரப் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
முக்கியத் தேரோட்டமான ஆழித் தேரோட்டத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடக்கி வைக்கின்றனர்.
இதில், ஆழித்தேர், அருள்மிகு நீலோத்பலாம்பாள் அம்மன் தேர் மற்றும் அருள்மிகு சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் இடம்பெறுகின்றன. தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 1,400 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
வாக்காளர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட கோரிக்கை

புதுச்சேரி மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புத் தொடர்பாக கலெக்டர் தேவநீதிதாஸ் தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் சனிக்கிழமை நடந்தது.
வாக்குச் சாவடி தொடர்பான விவரம் அரசிதழில் 19.2.2008-ல் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. அதற்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல் அடிப்படையில் நகரப் பகுதியில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு வாக்குச் சாவடி அமைய வேண்டும்.
கிராமப் பகுதியில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வாக்குச் சாவடி கட்டாயம் இருக்க வேண்டும்.
வாக்குச் சாவடியில் நகரப் பகுதியில் குறைந்தது 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குப் பதிவு அறை, கிராமப் பகுதியில் குறைந்தது 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குப் பதிவு அறை அமைய வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு நடந்துள்ள நிலையில் வாக்காளர்களுக்குப் புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று திமுக அமைப்பாளர் ஆர்.வி. ஜானகிராமன், அதிமுக செயலர் ஆ.அன்பழகன் ஆகியோர் வலியுறுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் வி.பாலாஜி, மனோகர் என்கிற ரத்தினம், திமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி. சிவக்குமார், ஆர்.சிவா, டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன், ராஜாராமன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக துணைச் செயலர் காசிநாதன், புமுகா சார்பில் லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் பக்தவச்சலம், பாமக சார்பில் சிவக்குமார் மற்றும் ஆர்.பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் செயலர் நாரா. கலைநாதன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் செயலர் வி.பெருமாள், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
புதுவையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கோரி ஒரு கோடி கையெழுத்து

விலைவாசி உயர்வைக் கண்டித்தும், கட்டுப்படுத்த வலியுறுத்தியும், பொது விநியோக முறையைப் பலப்படுத்த கோரியும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி நாடாளுமன்ற தலைவரிடம் அளிக்க ஏஐடியூசி முடிவு எடுத்துள்ளது. புதுச்சேரி பஸ் நிலையம் அருகே நடந்த இயக்கத்துக்கு ஏஐடியூசி பொதுச் செயலர் வி.எஸ். அபிஷேகம் தலைமை வகித்தார். புதுச்சேரியில் இருந்து 1 லட்சம் கையெழுத்து பெறப்பட உள்ளது.
ஏஐடியூசி புதுச்சேரி தலைவரும் எம்எல்ஏவுமான ஆர். விசுவநாதன் இதைத் தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் நாரா. கலைநாதன் எம்.எல்.ஏ. விவசாயசங்கத்தின் பொதுச்செயலர் அ. ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கம்பன் விழா இம் மாதம் 9-ம் தேதி முதல் 3 நாள்கள் நடக்கிறது. இம்முறை மாணவர்கள் பேச்சாளர்களாக உருவாக வாய்ப்பு ,பல பரிசுகள்
இக் கழகத்தின் தலைவர் ந.கோவிந்தசாமி, செயலர் தி. முருகேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரி கம்பன் கழகம் இப்போது 43-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டும் அந்த வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
புதுச்சேரி கம்பன் கழகத்தில் இந்த விழா 3 நாள்கள் நடக்கிறது. 13 அறக்கட்டளைகள் சார்பில் 60 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விழாவில் மாணவர் அரங்கம் என்ற ஒரு நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதில் "இளந்தலை முறையினர் பார்வையில் கம்பன்' என்னும் தலைப்பில் மாணவர்கள் பேச உள்ளனர். கம்பன் விழாவில் பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்புக் கொடுக்க உள்ளோம்.
இதன் மூலம் அவர்கள் பேச்சாளர்களாக உருவாக முடியும். மேலும் அவர்கள் மேடைப் பயிற்சியையும் இதன் வாயிலாக வளர்த்துக் கொள்ள முடியும்.
"அனுமனின் உயர் பண்புகள்' குறித்து மாணவர் பி.செல்வம், "கோசலையின் நயத்தக்க நாகரிகம்' குறித்து மாணவி செüபர்ணிகா வைஷ்ணவி, "பரதனின் பண்பு நலன்கள்' குறித்து மாணவி சொபியா லாரன்ஸ் ஆகியோர் பேசுகின்றனர்.
ஊனமுற்ற மாணவருக்கு ஊக்கம் அளிப்பு
ஜே.வி.எஸ். நிறுவன அறக்கட்டளை சார்பில் ஊனமுற்ற மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும். இந்த அறக்கட்டளையை நிறுவியுள்ள முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து ஊனமுற்றவர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் அனைவருக்கும் ரூ.1000 பரிசு வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு 9 ஊனமுற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
புதுச்சேரியின் முதல்வராகப் பதவி வகிப்போர் கம்பன் கழகத்தின் புரவலர் அந்தஸ்தை பெற்று வருகின்றனர். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் முதல்வர் பதவியில் அமர்ந்தாலும் அவர்களுக்குக் கம்பன் கழகம் இந்த அந்தஸ்தை வழங்கி வருகிறது.
இப்போது கடந்த 8 ஆண்டுகளாக கம்பன் கழகத்தின் புரவலராக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விளங்கி வருகிறார். அவர் இந்த விழாவில் வரவேற்புரை ஆற்ற உள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை வகிக்கும் அந்தமான் ஆளுநர் போபிந்தர் சிங் இந்த விழாவில் பங்கேற்க வர உள்ளார்.
இந்த விழாவுக்குப் பிறகு 4 நாள்களில் பணி நிறைவு பெறவுள்ள ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மு. கற்பக விநாயகம் இந்த விழாவுக்குத் தலைமை வகிக்கிறார்.
மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி, புதுச்சேரி அமைச்சர்கள் வி.வைத்திலிங்கம்,ஸ இ.வல்சராஜ், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், மு. கந்தசாமி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவுக்கு ரூ.2.5 லட்சம் செலவாகும் என்று மதிப்பீடு செய்துள்ளோம் என்றனர்.
கம்பன் கழக பொருளாளர் வேல். சொக்கநாதன், துணைத் தலைவர்கள் ரத்தின ஜனார்த்தனன், வி.பி.சிவக் கொழுந்து, இணைச் செயலர் கி.கலியாணசுந்தரம், துணைச் செயலர் ஆ. ராஜகோபால், உறுப்பினர் அப்துல் மஜித் உள்ளிட்டோர் இப் பேட்டியின்போது உடனிருந்தனர்.

No comments: