Friday, May 02, 2008

செய்திகள் மே 2 காலை 8.00

புதுச்சேரி தொழிற்சாலைகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் புகார்
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி மற்றும் புதுச்சேரி மாநில ஐஎன்டியூசி சார்பில் மேதின விழா காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்தது.
இக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரணியன் பேசியதாவது : தொழிற்சாலைகள் குறைவான ஊதியம் வழங்குவது வேதனை அளிக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க மே தினத்தில் உறுதி ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் கூறினார். புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு முறைசாரா தொழிலாளர்களுக்குத் தனித்தனியாக வாரியம் அமைத்து தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுகிறது. புதுச்சேரி துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள சுய உதவிக்குழு பெண்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேரவையில் உத்தரவிட்டுள்ளார். இது பாராட்டுதலுக்குரியது. நாட்டின் முதுகெலும்பாக தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களின் நலம் பேணிக்காக்க வேண்டும். புதுச்சேரி ஐஎன்டியூசி தலைவர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். இச் சங்கத்தின் பொதுச் செயலர் சொக்கலிங்கம், செயலர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் திருமண உதவி: முதல்வர் வழங்கினார்
புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது.
விதவை மகள் திருமணத்துக்காக தலா ரூ. 15 ஆயிரம் வீதம் 3 பேருக்கும், ஏழை பெண்ணின் திருமண உதவியாக ரூ. 15 ஆயிரம் வீதம் 12 பேருக்கும், அரவணைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 1,200 வீதம் 11 பேருக்கும், குலவிளக்குத் திட்டத்தின் கீழ் ரூ. 500 வீதம் 16 பேருக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் சுமிதா, துணை இயக்குநர் மாலதி கலிவரதன், நல அதிகாரிகள் வடிவேலு, பங்கேற்றனர்.

தலத்தேரு ஸ்ரீ காளியம்மன் கோயில் குடமுழுக்கு
காரைக்கால் தலத்தேரு பகுதியில் அமைந்துள்ளது நாடார் உறவின்முறைக்கு சொந்தமான ஸ்ரீ தட்சண நடன காளியம்மன், ஸ்ரீ தட்சண பத்ரகாளியம்மன், ஸ்ரீ படைபத்ர காளியம்மன் கோயில்கள். இங்குள்ள ஸ்ரீ துர்கை, ஸ்ரீ நவக்கிரஹ சன்னிதி, ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ தட்சணமுத்து மாரியம்மன் ஆகிய சன்னிதிகளின் விமானங்களுக்கு குடமுழுக்கு செய்யது இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. 4 கால பூஜையாக நடத்தப்பட்டு புதன்கிழமை மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. அனைத்து விமானங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு, சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
காலாப்பட்டில் 3 மீனவ கிராமங்களைச் சேர்த்த மினவரகள் உண்ணாவிரதம்
புதுச்சேரி காலாப்பட்டில் 3 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியக்காலாப்பட்டு, சின்னகாலாப்பட்டு, பிள்ளைச்சாவடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவ மக்கள் திரண்டு மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு. ராமதாஸ் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியில் இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மே தினத்தை துக்க நாளாக அனுசரிக்கும் வகையில் இப் போராட்டத்தை மக்கள் நடத்துவதாக இதில் பேசிய மக்களவை உறுப்பினர் பேராசிரியர் ராமதாஸ் கூறினார்.
எம்.எல்.ஏக்கள் க.லட்சுமிநாராயணன் (புமுகா), அனந்தராமன் (பாமக), அருள்முருகன் (பாமக), மீனவ விடுதலை வேங்கைகளின் தலைவர் மங்கையர்செல்வம், மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் பி.எம். கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் இப் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.
பெரியகாலாப்பட்டு மீனவர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஊ. ராமலிங்கம் மற்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.
குரு. பன்னீர்செல்வம் (பாமக) இப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

No comments: