Friday, May 16, 2008

செய்திகள் மே 16 காலை 7.45 மணி

பூங்கோதை ராஜினாமாவை வரவேற்கிறோம் ஆனால் ராஜிநாமா செய்யவேண்டியது கருணாநிதியே- ஜெயலலிதா அறிக்கை I
அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா குறித்து ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நெருங்கிய உறவினர் தொடர்புடைய ஊழல் வழக்கை அவருக்குச் சாதகமாகக் கையாளுமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநரிடம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டதற்காக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா செய்துள்ளார். சுயமரியாதையுடன் செயல்பட்டுள்ள அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படும் ஒட்டுமொத்த விவகாரத்துக்கும் முதல்வரின் பதில் என்ன? முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் உள்துறை உள்ளது. இந்நிலையில், இவரின் உத்தரவின் பேரில் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதா? இல்லை, முதல்வருக்குத் தெரியாமலேயே ஒட்டுக் கேட்கப்பட்டதா?
அப்படியானால், முதல்வரின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே, இந்தப் பிரச்னையில் முதல்வர் ராஜிநாமா செய்யவேண்டும். இதற்கெல்லாம் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை என்றால், அதிகாரத்தில் தொடரும் தார்மிக உரிமையை முதல்வர் இழந்துவிட்டார் என்றே அர்த்தம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
மத்திய அரசு வழங்கிய துரு பிடித்த தடுப்பூசிக் குழல்கள் மீது தமிழகம் குற்றச்சாட்டு
தமிழகத்துக்கு தரமான ஊசிக் குழல்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸýக்கு தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலர் வி. கு. சுப்புராஜ் எழுதியுள்ள கடித விவரம்:-
""குழந்தைகளைத் தாக்கும் ஆறு உயிர்க் கொல்லி நோய்களைத் தடுப்பதற்காக 1985-ம் ஆண்டு தடுப்பூசித் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12.5 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள், 11.5 லட்சம் குழந்தைகள் இத் திட்டத்தினால் பலன் அடைகின்றனர்.
தேசிய குடும்ப நல மதிப்பீட்டின்படி, தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதனால் தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களின் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், குழந்தைப் பருவ ரண ஜன்னி, இளம்பிள்ளைவாதம் போன்ற நோய்களின் தாக்கம் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அண்டை மாநிலங்களில் போலியோ நோய் பாதிப்பு இருந்தாலும், தமிழகத்தில் போலியோ நோய் பாதிப்பு இல்லை. தடுப்பூசி சேவையில் தமிழகம் 100 சதவீத சாதனையை எட்டியுள்ளது. தமிழக அரசிடமிருந்து தரமான தடுப்பு மருந்துகள் வரப்பெற்றதால்தான் தமிழகம் இச் சாதனையை அடைய முடிந்தது.
டிசம்பர் முதல் பிரச்னை: மத்திய அரசு அண்மையில் டிசம்பர் 2007-ல் வழங்கிய தானே செயலிழக்கும் ஊசிக் குழல்களில் சில தரமற்றதாகவும், சில ஊசிகளில் துருவும், குழல்களின் உள்ளே தூசுவும் காணப்பட்டன. அவை தடுப்பூசி போட பயன்படுத்துவதற்கு சிறிதும் தகுதியற்றனவாக உள்ளன.
இது தொடர்பாக கடந்த 9.5.2008 அன்று இத்தகைய தரமற்ற ஊசிக் குழல்களின் மாதிரிகளோடு மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்மறையான விளைவு: திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட பிறகு அண்மையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தன. இதையடுத்து தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சில மாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது. ஆரம்ப சுகாதார மையங்களிலும் சில தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் டாக்டர்களின் மேற்பார்வையிலும் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட தரமற்ற ஊசிக் குழல்களைப் பயன்படுத்தினால் தடுப்பூசித் திட்டம் மீண்டும் பாதிப்படைவதோடு எதிர்மறையான விளைவுகளும் ஏற்படும். இதனால் இந்த ஊசிக் குழல்கள் பயன்படுத்தப்படுவது தமிழகத்தில் உடனடியாக முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே தரமான ஊசிக் குழல்களை உடனடியாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தானே செயலிழக்கும் ஊசிக் குழல்கள் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதால், அவற்றின் தரத்தை உறுதி செய்த பிறகு பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உடனடியாக அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று அந்தக் கடிதத்தில் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்
.புதுச்சேரி நகர சிரமைபுக்கு ரூ.100 கோடி திட்டம் மத்திய அரசின் செயலர் தகவல்
ஜவஹர்லால் நேரு தேசிய நகரப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி நகர புனரமைப்புத் திட்டங்களுக்கு ரூ.100 கோடி அளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. இதில் 80 கோடியை மத்திய அரசு அளிக்கும், மீதி ரூ.20 கோடியை தன்னுடைய பங்களிப்பாக புதுச்சேரி அரசு அளிக்க வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் செயலர் ஹர்ஜித் எஸ். ஆனந்து கூறினார். புதுச்சேரிக்கு வியாழக்கிழமை வந்த அவர், முதல்வர் என். ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்
புதுவையில் அரசு கேபிள் டி.வி. நடத்த விரைவில் தனி அதிகாரி: முதல்வர்

தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரி அரசு சார்பில் கேபிள் டி.வி. தொடங்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதையொட்டி புதுச்சேரி மாநில கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு புதன்கிழமை நடந்தது. இச் சங்கத்தின் தலைவர் அ.மு. சலீம் தலைமை வகித்தார்.
அதில் முதல்வர் ரங்கசாமி பேசியது:
பிற மாநிலங்களில் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை செயல்படுத்த புதுச்சேரி அரசு தயாராக இருக்கிறது. தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் அரசு கேபிள் டி.வி. நடத்தப்படும் என்று அறிவித்துள்ளோம். இதைச் செயல்படுத்த தனியாக ஓர் அதிகாரியை நியமிக்க உள்ளோம். கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனையைக் கேட்டு அரசு கேபிள் டி.வி. நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மக்கள் கட்டும் சந்தா கட்டணம் குறையும் என்றார்.

No comments: