Thursday, May 15, 2008

செய்திகள் மே 15 காலை 7.40 மணி

நாடு இருக்கும் நிலை எண்ணி கருணாநிதி வேதனை : பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்
முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூட இருந்தே குழி பறிக்கும் சிலரின் தோழமைதான் கிடைக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்நாடு வாழ, நலிவு தீர, நானிலம் தழைக்க நான்கைந்து பேர் கூட்டணி சேர்ந்து நற்செயல் புரியலாம் என்றால், கூட இருந்தே குழி பறிப்பவரின் தோழமைதான் கிடைக்கிறது. இந்நிலையில் அவர்கள் விருந்துக்கு அழைத்தால் வேம்பாய் கசக்கிறது.தொங்கலில் சேது சமுத்திரத் திட்டம்: பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்களால் வலியுறுத்தப்பட்ட, தமிழகத்தின் வளம் பெருகிட உதவக் கூடிய, அனைத்துக் கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் தொங்கலில் கிடக்கிறது.இன்னும் எத்தனைக் காலம் வாழப் போகிறோம் என்ற கேள்விக்கு பதில் தேடிய நாள்கள் ஓடிப் போய் செத்துப் பிழைக்கின்ற நேரத்தை நினைத்தவாறு நடுங்கச் செய்யும் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. தேசத்தைக் காப்பதா? தேகத்தை துளைத்துக் கூறுபோடும் குண்டு மழைக்கிடையே குழந்தை குட்டிகளோடு தவிப்பதா? அதுவும் இப்போதா அல்லது எப்போதா என்று வினாத் தொடுக்கும் விபரீதத் தீவிரவாதம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. தன்னலம் இல்லாதவர்களும், தாய்நாட்டிற்காக உயிரையும் துறப்பவர்களும் தான் என்னுடன் இருப்பவர்கள் என்ற பெருமிதம் வாய்க்கும் வரையில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாக புகார் : அமைச்சர் பதவியிலிருந்து பூங்கோதை ராஜிநாமா
பேரவையில் நேற்று இந்தப் பிரச்னை குறித்து ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, லஞ்சப் புகாரில் சிக்கிய தனது நெருங்கிய உறவினரான, மின்வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரியும் ஜவஹர் என்பவரைக் காப்பாற்றுவதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் உபாத்தியாயாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவர்களின் உரையாடல் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அரசியல் சாசனப்படி நடப்பேன் என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். இதற்கான பரிகாரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரே காண வேண்டும் என்றார்.அதற்கு பதிலளித்து முதல்வர் ,எதிர்க்கட்சியின் பணி எதுவோ அதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒ. பன்னீர்செல்வம் அமைதியான முறையில் நிறைவேற்றி உள்ளார். இடித்துச் சொல்ல வேண்டிய எதிர்தரப்பினர் இல்லாவிட்டால் அந்த அரசு தானாகவே கெட்டுவிடும் என்பது வள்ளுவர் வாக்கு.ஏற்கெனவே ஒட்டுக்கேட்ட விவகாரம் சட்டப் பேரவையில் எழுப்பப்பட்டு அதனை விசாரிக்க விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியில் ஒருவர் பேசுவதை இன்னொருவர் பதிவு செய்வது எளிதாகி இருக்கிறது.தலைமைச் செயலாளரும், இன்னொரு அதிகாரியும் பேசிக் கொண்டதாகப் பதிவான ஒட்டுக் கேட்பு விவகாரம் விசாரணையில் இருக்கும் போது இடையில் இந்த செய்தி வந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் வேதனைப்படுகிறேன். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கூறியதைப்போல விசாரணை கமிஷனோடு இதையும் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவரே தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.அமைச்சரின் ராஜிநாமா குறித்து நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் எப்படி நடைபெறுகிறது என்பதை நமது புலனாய்வு அமைப்பு மூலம் ஆராய வேண்டியிருக்கிறது. யோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழக எம்.எல்.ஏ. மாத ஊதியம் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு

சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நிதித் துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து நிதியமைச்சர் க. அன்பழகன் இந்த உயர்வினை அறிவித்தார்சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு தற்போது ரூ. 2,000 சம்பளம், ஈட்டுப்படி, தொகுதிப் படி, தொகுப்புப் படி, தொலைபேசி, வாகனம், தபால் ஆகிய படிகளுமாக சேர்த்து மாதத்துக்கு ரூ. 25,000 வழங்கப்படுகிறது.உறுப்பினர்களின் வேண்டுகோள்படி, சம்பளத்தில் ரூ. ஆயிரமும் , படிகளில் ரூ. 4 ஆயிரமும் சேர்த்து மாதத்துக்கு ரூ. 30,000 வழங்கப்படும். இந்த உயர்வு, 2008-ம் ஆண்டு ஏப்ரல் 1 - ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு... முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியமாக தற்போது ரூ. 7 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது, ரூ. 8 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இறந்தால், அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 3,500-லிருந்து ரூ. 4 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இவையும், 2008 ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றார் அமைச்சர் க. அன்பழகன். இதில் முதல்வர் கருணாநிதி கூறியது: எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக தற்போது ரூ. 1 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அது, ரூ. 1 கோடியே 50 லட்சமாக உயர்த்தித் தரப்படும். என்றார்
மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை புதுவை மாநில அந்தஸ்து கோருவது தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்

மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமாள். நேற்று விடுத்த செய்தியில் புதுச்சேரி சட்டப் பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றும்போது காங்கிரஸ் மற்றும் பாமக எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். பிறகு அக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிறப்பு மாநில அந்தஸ்துதான் மத்திய அரசிடம் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது சரியல்ல. அதனால் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்த கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.எங்கள் கட்சியைப் பொறுத்தவரை புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற வேண்டும். ஏற்கெனவே மத்திய அரசு அருணாசலபிரதேசம், சிக்கிம், மிசோரம் போன்றவற்றுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கியுள்ளது. அதனால் புதுச்சேரியின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி 2 ஐந்தாண்டு திட்டங்கள் முடிந்த பிறகுதான் இந்தியாவுடன் இணைந்தது. இந்தக் காரணத்தைக் காட்டி புதுச்சேரிக்குச் சிறப்பு மாநில அந்தஸ்து பெற முடியும்.கடந்த பாஜக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதார கொள்கைதான் இப்போதுள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் பின்பற்றப்படுகிறது. அதனால் விலைவாசி உயர்ந்துள்ளது.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எங்கள் கட்சி சார்பில் இம் மாதம் 15-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடக்கிறது. புதுச்சேரியில் 6 மையங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் பெருமாள்

முதல்வர் அறிவித்த சலுகை வேண்டாம்; அதிகாரம்தான் வேண்டும்: நகராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு
நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு செல்போன் படி உள்ளிட்ட சலுகைகளை அண்மையில் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். புதுச்சேரி நகராட்சியின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியபோது இதற்காக முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்க நகராட்சித் தலைவர் டாக்டர் ஸ்ரீதேவி முயன்றார். இதற்கு புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். செல்போன் படி அளிப்பது போன்ற தனி நபர் சலுகைகளை நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. நகராட்சிக்கு உரிய அதிகாரத்தை முதல்வர் ரங்கசாமி கொடுக்க வேண்டும் என்றனர். இதற்கு அதிமுக உறுப்பினர்களும் ஆதரவாக கோஷம் எழுப்பினர்.ஒரு கட்டத்தில் நகராட்சிக்கு அதிகாரம் வேண்டும்தான் என்று நகராட்சித் தலைவி டாக்டர் ஸ்ரீதேவி ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றலாம் என்றும் அவர் கூறினார். இருப்பினும் இது தொடர்பாக இக் கூட்டத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேறவில்லை. செல்போன் படி உள்ளிட்ட சலுகைகளை எங்களுக்கு அளித்தால் போதாது. மக்களுக்காகப் பணியாற்ற நகராட்சிக்கு உரிய அதிகாரத்தை அரசு அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

No comments: