Wednesday, May 21, 2008

செய்திகள் வாசித்தும் பாதித்தும் மே 21 காலை 7.30 மணி

கன்னியாகுமரியில் நிலநடுக்கம் 50,000 பேர் வீதிகளில் தவிப்பு

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் வைக்கப் பட்டிருந்த பாத்திரங்கள் உருண்டன. தூங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் நிலஅதிர்வை உணர்ந்து வீடுகளை விட்டு வெளியே அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.
சுமார் 6 வினாடிகள் நீடித்த இந்த நிலஅதிர்வு கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோவளம், புதுக்கிராமம், வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், லீபுரம், ஒற்றையால்விளை, பொழிக்கரை, மணக்குடி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நெல்லை மாவட்டம் கூட்டப்புளியிலும் உணரப்பட்டது.
மொத்தம் 40 கிராமங்களையும் சேர்த்து சுமார் 50,000 பேர் நடுரோட்டில் விடியவிடிய பீதியில் விழித்து இருந்தனர். இதனால் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

--------------------------------------------------------------------------------
ரேஷன் கார்டு பெற இனி கணினி பதிவு முறை விண்ணப்பம்

தமிழகத்தில் ரேஷன் கார்டு வினியோகிக்க ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, அந்தந்த மாவட்டங்களிலேயே அச்சிட்டு வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
இப்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கணினியில் எளிதில் பதிவு செய்ய வசதியாக கணினி பதிவு விண்ணப்ப மாதிரியை குடிமைப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக விண்ணப்பிப்போருக்கு, ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை இருப்பின் அதன் எண்ணை குறிக்கவேண்டும்.
ஏற்கனவே குடும்ப அட்டையில் பெயர் இருந்து நீக்கப்பட்டிருப்பின் அதற்கான ஆவணத்தை இணைக்கவேண்டும். வீட்டு முகவரியை உறுதி செய்ய, வாக்காளர் அடையாள அட்டை நகல், சொந்த வீடாக இருந்தால் சொத்து வரி அல்லது, மின் கட்டண ரசீது அல்லது டெலிபோன் பில் அல்லது வங்கி பாஸ் புத்தகத்தின் முகப்பு அட்டையில் இடம் பெற்றுள்ள முகவரி பகுதி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருப்பின் அதற்கான அத்தாட்சி சான்று ஆகியவற்றை இணைக்கவேண்டும்.
மேலும் காஸ் இணைப்பு இருப்பின் அதை சார்ந்த தகவல்கள், அரிசி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் வாங்க விருப்பம், அரிசிக்கு பதில் கூடுதல் சர்க்கரை தேவையா, எந்த பொருளும் வாங்க விருப்பமில்லை என்றால் அதை குறிப்பிடவேண்டும்.
உணவு வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘முன்பு மக்கள் வழங்கும் விண்ணப்பத்தை சரிபார்த்து, கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்யவேண்டும். விண்ணப்பங்களை பார்த்து ரேஷன் கார்டில் பெயர்களை பதிவு செய்வதிலும் காலதாமதம் ஏற்படும்.
தற்போது வழங்கப்பட்டுள்ள கணினி பதிவு விண்ணப்பத்தால் பணிகள் எளிதாகி, குறைகள் தவிர்க்கப்படும். தவறான தகவல் அளித்திருந்தால் கூட விண்ணப்பதாரரே பொறுப்பு ஏற்கவேண்டியிருக்கும்,’’ என்றனர்.
புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்துதான் தேவை: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்
மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி கட்சியின் மாநிலச் செயலர் சோ. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமா? சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது வேடிக்கையானது. புதுச்சேரியின் பிரத்யேக சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை அமல் செய்ய புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்று முதல்வர் ரங்கசாமி கூறுவது ஏற்புடையது அல்ல. முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 7 ஆண்டுகளாக நிதி மேலாண்மையில் சீர்கேடுகளும், ஒழுங்கீனங்களும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலே மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்படுவதற்கு அடிப்படை. புதுச்சேரியில் பெருகி வரும் குற்றங்களுக்குக் கட்டுப்பாடற்ற ரியல் எஸ்டேட் தொழில்தான் அடிப்படைக் காரணம். அதனால் புதுச்சேரியில் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டினர் அசையா சொத்துகள் வாங்கி விற்பதற்குத் தடை விதிக்க வேண்டும். நகர்ப் புறத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை மீண்டும் அமல் செய்ய வேண்டும். உடனடியாக ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் திட்டங்களை அமலாக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் பாலசுப்பிரமணியன்.

பாமகவின் நிலை என்ன? தேசிய செயலர் டி. ராஜா எம்.பிகேள்வி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதை பாமக ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்று அக் கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா எம்.பி. கூறினார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதை பாமகவும் ஆதரித்தது. ஆனால் பாமகவைச் சேர்ந்த எம்.பி. ராமதாஸ், புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கேட்க வேண்டும். அப்போதுதான் மாநில அந்தஸ்தாவது மத்திய அரசு கொடுக்கும் நிலைக்கு வரும் என்று கூறியிருந்தார். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ விசுவநாதன் விமர்சனம் செய்திருந்தார். இதனால் இப் பிரச்னையில் பாமகவுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறுகையில், சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில் பாமகவின் நிலை என்ன என்பதை அக் கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

No comments: