Monday, May 19, 2008

செய்திகள் மே 19 காலை 7.45 மணி

கர்நாடக விஷ சாராயத்துக்கு 1 8 தமிழக தொழிலாளர்கள் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை சுற்றியுள்ள கிராம மக்கள், கர்நாடகாவில் உள்ள ஆனைக்கல்லுக்கு கூலி வேலைக்கு செல்வது வழக்கம். தளியை அடுத்த பின்னமங்கலம், தேவகானப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம், 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல்லுக்கு சென்றனர். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது, ஆனைக்கல்லில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்தனர். ஊருக்குத் திரும்பும் வழியிலேயே பின்னமங்கலத்தை சேர்ந்த வேணுகோபால் மனைவி ஆஞ்சனம்மா மயங்கி விழுந்தார். அவரை மற்றவர்கள் ஊருக்கு தூக்கி வந்தனர்.
தேவகானப்பள்ளியை சேர்ந்த முகமது (50), நாராயணன் (46), பின்னமங்கலத்தை சேர்ந்த ஆஞ்சனம்மா (48), சின்னப்பன் (35), கிருஷ்ணப்பா (65), அடவிசாமிபுரத்தை சேர்ந்த புட்டம்மா (65) ஆகியோர் மயங்கிய நிலையிலேயே இறந்தனர்.
மயங்கி விழுந்த இன்னும் சிலரை ஆனைக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், சின்ன முனியம்மா (65), ரவியும் (35) சிகிச்சை பலனின்றி இறந்தனர். முனிராஜ் (32), முனுசாமி உட்பட 4 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓசூர் சப்&கலெக்டர் நாகராஜன், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், எஸ்பி. தேன்மொழி, மதுவிலக்கு அமல்பிரிவு ஏ.டி.எஸ்.பி. மகேஸ்குமார் ஆகியோர் பின்னமங்கலம் சென்று விசாரணை நடத்தினர்.
முதல்வர் கருணாநிதி நலமுடன் வீடு திரும்பினார்.
முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார். அவரை மேலும் ஒரு வாரத்துக்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முதல்வர் கருணாநிதி கடுமையான கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார் . கடந்த மே 16-ம் தேதி காலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீண்ட காலத்துக்குப் பின்...: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, தனது பேரனான தயாநிதி மாறனைச் சந்திக்க விரும்பாமல் கருணாநிதி தவிர்த்து வந்தார். இந் நிலையில், கருணாநிதியை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் தயாநிதி.
இந்தச் சந்திப்பின் போது, குடும்பப் பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. கருணாநிதியை தயாநிதி மாறன் நேரில் சந்தித்ததன் மூலம், இரு குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
: வீடு திரும்பினாலும், குறைந்தது ஒரு வாரமாவது ஓய்வில் இருக்க வேண்டும் என முதல்வரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கழுத்து மற்றும் முதுகு வலியைக் குறைக்கும் வகையில் இருக்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியாகும்
பத்தாம் வகுப்புத் தேர்வு கடந்த மார்ச் 25-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ம் தேதி வரையில் நடைபெற்றன. மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் சுமார் 8 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்வது பூர்த்தியாகிவிட்டது. அவற்றை வெளியிடுவது தொடர்பாக அதிகாரிகள் நிலையிலான கூட்டம் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெறுவதாக இருந்தது. அக்கூட்டம் அநேகமாக ஓரிரு தினங்களில் கூடி, முடிவு வெளியிடும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகள் அனைத்துக்கும் மாநிலக் கல்வித் திட்டத்தைப் போல் சீரான அதிகபட்ச மதிப்பெண்ணுக்கு மதிப்பிடப்படும்.
இதன் மூலம் அனைவருக்கும் சதவீத அடிப்படையில் மதிப்பெண்ணைக் குறிப்பிடுவது எளிதாக இருக்கும் என்று கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் தேரோட்டம்
முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் திட்டத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு. ராமதாஸ், எம்எல்ஏக்கள் நாராயணசாமி, நமச்சிவாயம், ஏழுமலை, தியாகராஜன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். வேல்ராம்பட்டைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (65) விநாயகர் தேர் சக்கரத்தின் அடியில் தேங்காய் வைத்தார். அப்போது கோவிந்தம்மாள் கால் மீது தேர் சக்கரம் ஏறியது. இதில் காயம் அடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் போலீஸôர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த விழாவையொட்டி திருக்காமேஸ்வரர் கோயில் தேவஸ்தானம் சார்பில் பக்தி பாடல் அடங்கிய குறுந்தகட்டை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.

No comments: