Saturday, May 24, 2008

வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் மே 24 காலை 7.20 மணி

இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் .இவை தினமணி, தினகரன் தமிழ் பதிப்பில் இன்று வந்தவையில் சில .இந்த தினசரி நாளிதழ்களுக்கு நன்றி .இந்த குறிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல
இந்த ஆண்டு புதிதாக 25 ஆயிரம் என்ஜினீயர்களுக்கு வேலை இன்போசிஸ்
இந்த ஆண்டு புதிதாக 25 ஆயிரம் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இருப்பதாக இன்போசிஸ் துணைத் தலைவர் நந்திதா குர்ஜார் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள 250 பொறியியல் கல்லூரிகளில் திறமையான என்ஜினீயர்களை தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது நமது பணி எல்லாம் சிஸ்டத்தில் தான். கன்சல்டிங், பிபிஓஎஸ் போன்ற பணிகள்தான். எனவே நாங்கள் சிறந்த பொறியாளர்களையே விரும்புகிறோம் என்று அவர் கூறினார். அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை இருந்தாலும் கூட இந்த ஆண்டு 25 ஆயிரம் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இது மேலும் அதிகரிக்கும். கடந்த ஆண்டு 25 ஆயிரம் பொறியாளர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இறுதியில் 30 ஆயிரம் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனம் 1,000 காம்பஸ் இன்டர்வியூ நடத்தியது. இந்த ஆண்டு 1,050 காம்பஸ் இன்டர்வியூ நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர். வர்த்தகப் பள்ளிகளில் 350 பட்டதாரிகளைத் தேர்வு செய்ய உள்ளோம். கடந்த ஆண்டு 100 வெளிநாட்டு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.என்று அவர் கூறினார்.
தரையிலிருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் பிருத்வி ஏவுகணை சோதனை முழுவெற்றி

ஒரிசா மாநிலம், சந்திப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிருத்வி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. 150 முதல் 250 கி.மீட்டர் வரை தரையிலிருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் பிருத்வி ஏவுகணை சோதனை முழுவெற்றி அடைந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
8.56 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் திண்ணமும் கொண்ட இந்த ஏவுகணை 1000 கிலோ வெடிமருந்தை சுமந்து செல்லும் திறன் கொண்டது. திரவ மற்றும் திட எரிபொருளில் இயங்கக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திப்பூரிலிருந்து காலை 10.30 மணிக்கு ஏவப்பட்ட ஏவுகணை குறிப்பிட்ட நேரத்துக்குள் வங்கக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலக்கை குறி தவறாமல் தாக்கி அழித்தது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் (டிஆர்டிஓ) மற்றும் ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்பு ஏவுகணைப் பிரிவு ஆகியவை இணைந்து இந்த சோதனையை நடத்தின. பிருத்வி ஏவுகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரு விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி விவசாயக் கடன் தள்ளுபடித்தொகை ரூ.60 ஆயிரம் கோடி தற்போது ரூ.71,680 கோடி
நாடுமுழுவதும் பெரு விசாயிகளுக்கான கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பொதுப் பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவித்திருந்த விவசாயக் கடன் தள்ளுபடித்தொகை ரூ.60 ஆயிரம் கோடியை தற்போது ரூ.71,680 கோடியாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுதில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து கூறியது: ஏற்கெனவே தீட்டப்பட்ட திட்டம் 3 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடையும் விதத்தில் இருந்தது. தற்போது மாற்றி அமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் 3.69 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பெரு விவசாயிகளையும் சேர்த்து மொத்தம் 4 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் நிலை உருவாகியுள்ளது. கூட்டுறவு கடனுதவி கழகம் மற்றும் அதேபோன்ற நிதியமைப்புகள் நீங்கலாக இதர நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட கடன்கள், 1997 மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக விநியோகிக்கப்பட்ட கடன்கள் ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்காது.
ரூ.84,378 கோடிக்கு மூன்றே மாதங்களில் தங்கம் விற்பனை உலக தங்க கவுன்சில் தகவல்
ஜனவரி முதல் மார்ச் வரையிலான 2008ம் ஆண்டின் முதல் காலாண்டில் உலக அளவில் தங்கத்தின் அளவு குறைந்தாலும் விற்பனை மதிப்பு உயர்ந்திருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்த போதிலும், முதல் காலாண்டில் தங்கத்தின் விற்பனை ரூ.84 ஆயிரத்து 378 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 20 சதவீதம் கூடுதல் ஆகும்.
எனினும், இதே காலகட்டத்தில் 701 டன் தங்கம் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் குறைவு. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு விற்ற அளவுக்குதான் விற்பனை ஆகி உள்ளது.
மார்ச் மாத வாக்கில் தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத அளவில், பவுன் விலை ரூ.10 ஆயிரத்தைத் தொட்டது. பிறகு இறங்கினாலும் ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விற்பனை அளவு குறைந்து விட்டதாக உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

No comments: