Tuesday, August 12, 2008

செய்திகள் ஆக்ஸ் 12 மணி 7.30 am

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாதனை ! ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் அபிநவ் பிந்த்ரா ! -- ஏ.சுகுமாரன்
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா (25). பெய்ஜிங்கில் திங்கள்கிழமை நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மொத்தம் 700.5 புள்ளிகளைச் சேர்த்து முதலிடம் பெற்று, இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் அவர். 108 ஆண்டுக் கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் கிடைப்பது இதுவே முதல்முறை. இதற்குமுன்பு குழு விளையாட்டான ஹாக்கியில் 8 முறை இந்தியா தங்கம் வென்றுள்ளது.
சீன வீரர் ஸý கினான் 699.7 புள்ளிகளைச் சேர்த்து வெள்ளிப் பதக்கத்தையும், பின்லாந்து வீரர் ஹென்றி ஹக்கினென் 699.4 புள்ளிகளைச் சேர்த்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

அப்துல் கலாம ராமச்சந்திரா பல்கலைக்கழக . சிறப்புப் பேராசிரியராக பதவி ஏற்றார் -- ஏ.சுகுமாரன்
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பொறுப்பேற்க உள்ளார். நவீன மருத்துவ அறிவியல், ஆய்வுத் துறை மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்களை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அளிக்கும் வகையில் மருத் துவ, துணை மருத்துவ, செவிலியர் மாணவர்களையும் இளம் ஆராய்ச்சியா ளர்களையும் ஊக்குவிக்க விரும்புவதாக கலாம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ, துணை மருத்துவ மாணவர்களுக்கு கற்பிப்பதோடு இளம் ஆய்வாளர்களுக்கும் வழிகாட்டியாக இருப்பார். தொலை மருத்துவம் மற்றும் கம்ப்யூட்டர்சார் நிர்வாகத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர், அவரிடம் ஏற்கெனவே பதிவு செய்துள்ளார்.
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் செவிலியர் மாணவ - மாணவிகள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

புதுவை மாநிலத்துக்கு 70 மெகாவாட் மின்சாரம உடனடியாக வேண்டும் ராமதாஸ் எம்.பி. கடிதம் -- ஏ.சுகுமாரன்

புதுச்சேரி மாநிலத்திற்கு உடனடியாக 70மெகாவாட் மின்சாரத்தை ஒதுக்கவேண்டும் என்று மத்திய மின்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேவுக்கு பேராசிரியர் ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.அதில் புதுவை ïனியன் பிரதேசம் உருவானதிலிருந்து அதன் வளர்ச்சிக்கு மின்சாரம் ஒரு மிகப்பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறது. எந்த நேரத்திலும் மின் அளிப்பு புதுச்சேரியில் கிடைப்பதன்மூலம் இந்த ïனியன் பிரதேசம் வெளிமாநிலங்களிலிருந்து பல்வேறு தொழிற்சாலைகளையும், முதலீட்டையும் ஈர்த்து இருக்கிறது.
மூலப்பொருட்களே இல்லாத புதுச்சேரியில் பல தொழிற்சாலைகள் வளர்ந்து மாநில வருவாய்க்கு ஏறக்குறைய 45சதவீத வருமானத்தை தொழிற்சாலைகள் உருவாக்கி கொடுத்திருக்கிறது. ஆனால் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை இந்த தொழில் வளர்ச்சியை மிகவும் பாதித்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மின்சக்திக்கான தேவை சமீபகாலத்தில் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. தற்போதைய மொத்த மின் தேவையின் அளவு 288மெகாவாட் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தேவை மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்துதான் பெறப்படுகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும், தளிச்சாரில் உள்ள தேசிய மின் உற்பத்தி கழகமும் புதுவைக்கு தேவையான மின்சக்தியை அளித்து வருகின்றன.
ஆனால் கடந்த 2மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளினால் இந்த 2நிறுவனங்களும் புதுச்சேரிக்கு தேவையான மின் அளிப்பை கொடுக்க முடியவில்லை. நெய்வேலியிலிருந்து தினமும் கிடைக்கக்கூடிய 110மெகாவாட்டிலிருந்து 25மெகாவாட்டாக குறைந்து மின்சாரம் கிடைக்கிறது. தேசிய கழகமும் வருடாந்திர பராமரிப்புக்காக மூடப்பட்டுள்ளதால் அதனுடைய அளிப்பும் 20மெகாவாட்டாக குறைந்திருக்கிறது. அதிகமாக தேவைப்படும் மின் அளவின் கணக்கை குறைத்துக்கொண்டு பார்த்தால், தற்போதுள்ள நிலையில் புதுச்சேரியின் தேவை 220மெகாவாட்டாக கணக்கிடப்பட்டுள்ளது.ஆனால தற்போது பல ஆதாரங்களில் இருந்தும் கிடைக்கக்கூடிய மின் சக்தியின் அளவு வெறும் 150மெகாவாட்டாக மட்டும் இருக்கிறது. எனவே தற்போது புதுச்சேரியின் அத்தியாவசிய தேவையை கருத்தில்கொண்டால்கூட 70மெகாவாட் மின்சக்தி உடனடியாக தேவைப்படுகிறது. இந்த மின்சக்தி பற்றாக்குறையினால், புதுச்சேரி அரசு சிக்கன நடவடிக்கையை நடுத்தர மற்றும் பெரிய அதிக அழுத்தம் கொண்ட நிலையங்களில் மின்சக்தியை குறைத்து இருக்கிறது. புதுவையில் இப்படிப்பட்ட ஒருநிலை இதுவரை ஏற்பட்டதே கிடையாது.
அத்தியாவசிய தேவைக்குரிய மின் அளிப்புக்கூட கிடைக்காவிட்டால் சிறு தொழில்கள் மட்டுமல்ல, புதுச்சேரியின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே புதுச்சேரிக்கு ஒரு முக்கியத்துவம் அளித்து தென்னகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் மின் சக்தியிலிருந்து உடனடியாக 70மெகாவாட் மின்சக்தியை புதுச்சேரிக்கு அளித்து வளர்ச்சிபாதையில் இருந்து தவறாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.இதுசம்பந்தமாக புதுச்சேரி மின்சக்தி அமைச்சர் வைத்திலிங்கம் தங்களுக்கு 2கடிதங்களை எழுதியிருப்பதாக அறிகிறேன். எனவே தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் பேராசிரியர் ராமதாஸ் எம்.பி. கூறியுள்ளார்.

மக்களுக்காக ஒன்றுபட்டு உழைக்கநம்முடைய தோழமை சுடர் அணையாமல் காப்போம்--கம்ïனிஸ்டு கட்சிகளுக்கு கருணாநிதி உருக்கம் -- ஏ.சுகுமாரன்

கலைஞரின் சட்டமன்ற உரைகள் மற்றும் `மீசை முளைத்த வயதில்' ஆங்கில மொழியாக்கம் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா, சென்னை கலைஞர் அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கலைஞரின் சட்டமன்ற உரைகள் நூலை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன் வெளியிட்டார். அதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
`மீசை முளைத்த வயதில்' ஆங்கில மொழியாக்க நூலை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. திருவாசகம் வெளியிட, அதை நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி என்.சிவா பெற்றுக்கொண்டார்.
விழாவில் ஏற்புரை வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும்போது மக்களுக்காக நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அதற்காக நம்முடைய தோழமை சுடரை அணையாமல் காப்போம் என்று கம்ïனிஸ்டு கட்சிகளுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார் எங்களுக்கு உணர்வுகள் உண்டு. நாங்கள் ஒன்றாக பழகியவர்கள். கருணாநிதி எந்தக் காலத்திலேயிருந்து கம்ïனிஸ்ட்டாக இருக்கிறான் என்பது நம்முடைய கம்ïனிஸ்டு கட்சித் தலைவர்கள் இருவருக்கும் தெரியும், இங்கே வந்திருப்பவர்களுக்கும் தெரியும். அதை போல என்னோடு எவ்வளவு காலமாக இவர்கள் பழகுகிறார்கள், என்னைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது எனக்கும் தெரியும். ஆகவே என்னைப் பற்றி ரெங்கராஜன் தெரிந்து கொள்வதல்ல, சிவபுண்ணியம் தெரிந்து கொள்வதல்ல, நம்மைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள், மக்கள் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்காமல், நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் - அந்த மக்களுக்காக!
எந்த மக்களுக்காக இதுவரை உழைத்தோம்? இடையிலே ஏதேதோ வந்தது, போனது. மழை கூடவருகிறது, இடி கூடஇடிக்கிறது. அந்தமான் தீவிலே நிலம் அசைந்தால், இங்கே கூட நிலம் அசைகிறது. அதெல்லாம் இயற்கையின் விசேஷங்கள். நாம் இன்றைக்கு எந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இங்கே கூடியிருக்கிறோம்? எந்த கருத்துக்களால் நாம் ஒன்றுபட்டோம்? எந்தக் கருத்துக்கள் நம்மைப் பிணைத்தன? எந்த கருத்துக்கள் தமிழகத்தில், இந்தியாவில் வளரவிடாமல் செய்ய உறுதி பூண்டோம்? எந்த நிகழ்ச்சி நம்மை குலுங்க வைத்தது? பாபர் மசூதி நிகழ்ச்சியால் பா.ஜ.க.வின் கொடூரத்தை நாம் புரிந்து கொண்டோமா? இல்லையா, அதற்குப் பிறகு நாம் எடுத்த நிலை என்ன? அந்த நிலையிலே நாம் நிலையாக நிற்கப் போகிறோமா இல்லையா என்பதை தான் நாம் முடிவு செய்தாக வேண்டும்.
உங்கள் யாரையும் நான் கசக்கி பிழிந்து முடிவு செய்கிறாயா? இல்லையா? என்று கேட்கத் தயாராக இல்லை. அப்படி கேட்க கூடிய உரிமை எனக்கு இருக்கிறது. அதை தாங்கக்கூடிய வலிமை ரெங்கராஜனுக்கும், சிவபுண்ணியத்திற்கும் இருக்கிறது. இருவருடைய உருவத்தையும் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எனவே அவர்கள் தாங்கக் கூடியவர்கள்.
அதே நேரத்திலே தமிழகம் தாங்குமா? நாடு தாங்குமா? நம்மை நம்பியிருக்கிற ஏழை எளிய மக்கள், பாட்டாளி மக்கள்- நாம் தான் அவர்களைக் காப்பாற்றக் கூடியவர்கள்- நாம் தான் அவர்களின் காவலர்கள் -என்று கருதியிருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவர்களையெல்லாம் அரவணைத்து செல்ல வேண்டுமேயானால் - நீங்கள் எங்கேயோ வேறொரு மாநிலத்திலே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களை பார்த்து அதனால் ஏற்படுகின்ற கோபத்தை நம்மோடு இருக்கின்ற பீட்டர் மீது காட்டலாமா? காட்டக்கூடாது. பீட்டர் நம்மோடு இருக்கிறார். ஆகவே பீட்டர் மீதுள்ள கோபம், வடக்கே ஏற்பட்ட கோபத்திற்கு நிகரானதல்ல. இது நம்முடைய தோழமை. இந்ததோழமை அரும்பாடு பட்டு வளர்க்கப்பட்ட தோழமை. இந்த தோழமை தியாக தீபம். இந்த தோழமை தியாகத்திலே எழுந்த சுடர். அந்த சுடரை அணையாமல் காப்போம் என்று இந்த நிகழ்ச்சியிலே எல்லோரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டு இந்த அளவிலே என்னுடைய உரையை முடிக்கின்றேன்.இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.முன்னதாக விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, டி.கே.ரெங்கராஜன் எம்.பி, சிவபுண்ணியம் எம்.எல்.ஏ, பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., கவிஞர் வைரமுத்து உள்பட பலர் பேசினர்.முடிவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. நன்றி கூறினார்.

சென்னை விமான நிலையம விரிவாக்கம் ! பணி அடுத்த மாதம் தொடக்கம்மத்திய மந்திரி தகவல் -- ஏ.சுகுமாரன்

சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து அதிகரித்து இருப்பதால் விமானத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் விமானப் போக்குவரத்து துறை தொடர்பான பாராளுமன்ற ஆலோசனை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி பிரபுல் படேல் தலைமை வகித்தார். நஜ்மா ஹெப்துல்லா, பரூக் அப்துல்லா, ராஜீவ் சுக்லா, ராகுல் பஜாஜ் உள்ளிட்ட எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரபுல் படேல் கூறியதாவது:-
சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வது தொடர்பான திட்டத்துக்கு பொதுத்துறை முதலீடு வாரியம் அனுமதி அளித்து விட்டது. தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக விளக்க அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், 2008-ம் ஆண்டு செப்டம்பர் (அடுத்த மாதம்) முதல் விரிவாக்கப் பணிகள் தொடங்கும்.
இந்த இரண்டு விமான நிலையப் பணிகளையும் இந்திய விமான நிலைய ஆணையமே மேற்கொள்ளும். தனியார் வசம் ஒப்படைக்கப்படாது. டெல்லி விமான நிலையத்தில் உள்ள மூன்றாவது ஓடுதளம் சோதனை ஓட்டத்துக்காக இன்னும் 10 நாளில் திறக்கப்படும். டெல்லியில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து மந்திரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது.
`ஏவியேசன் டர்பைன் ப்ïல்' எனப்படும் விமான எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், விமான நிறுவனங்களின் பொருளாதார நிலைமை பாதிக்கப்படுவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தேன். இதையடுத்து மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை பிரதமர் அமைத்துள்ளார்.விமான நிறுவனங்களின் பொருளாதார நிலைமை, அவற்றின் பிரச்சினைகள் போன்றவை குறித்து அந்த குழு ஆலோசனை நடத்தும். இந்த குழுவின் முதல் கூட்டம் வரும் 14-ந் தேதி நடைபெறுகிறது.இவ்வாறு பிரபுல் படேல் கூறினார்.





கடலூர் சிப்காட் தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி --30பேர் படுகாயம் --பதற்றம் நிலவுகிறது -- ஏ.சுகுமாரன்

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பயோனியர் கெமிக்கல் என்ற தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களின் தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க மறுத்தது. கடந்த மாதம் 12ம் தேதியில் இருந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தொழிற்சாலை முன்பு 11ம்தேதி மறியல் நடத்தப் போவதாக சிஐடியு அறிவித்தது.அதன்படி நேற்று காலை தொழிற்சாலை முன்பு ஏராளமான தொழிலாளர்கள் திரண்டனர்.
தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் தாசில்தார் சண்முகசுந்தரம் பேச்சு நடத்தினார். இதில் உடன் பாடு ஏற்பட வில்லை. தொழிலாளர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
டிஎஸ்பி ஸ்டீபன் ஏசுபாதம் தலைமையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் தடியடி நடத்தி தொழிலாளர்களை விரட்டியடித்தனர். தடியடியில் 30பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 30பேரை கைது செய்துள்ளனர்.

No comments: