Sunday, August 03, 2008

மீண்டும் செய்திகள் ஆக் 3

தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய கூட்டமைப்பு நாடுகள் கூட்டு சேர மன்மோகன் சிங் அழைப்பு --ஏ.சுகுமாரன்

`சார்க்' அமைப்பின் 15-வது மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று தொடங்கியது. இது தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் ïசுப் ராசா கிலானி மற்றும் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மாலத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டின் தொடக்க நாளான நேற்று பேசினார்.
அப்போது; பெங்களூர், ஆமதாபாத் நகரங்களில் சமீபத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றி குறிப்பிட்டதோடு, நாடுகளின் முன்னேற்றத்துக்கு தீவிரவாதம் தனிப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக கூறினார். தீவிரவாதத்தை ஒடுக்க `சார்க்' நாடுகள் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.தீவிரவாதத்துக்கு எல்லை கிடையாது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலும், பெங்களூர், ஆமதாபாத் நகரங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களும் தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான செயல்களையே காட்டுகின்றன. தெற்கு ஆசியாவில் தீவிரவாதம் இன்னும் இருக்கிறது என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. தீவிரவாதம் தொடர்ந்து தனது கோர முகத்தை காட்டி வருகிறது.நாடுகளின் முன்னேற்றத்துக்கும் நிலைத்தன்மைக்கும் தீவிரவாதம் தனிப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. எனவே தீவிரவாதத்தை ஒழிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உறுதியுடன் போராட வேண்டும். சட்டத்தையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும்.சமூக கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிக்கும் தீவிரவாதிகளின் முயற்சியை நாம் முறியடிக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நாம் தளர்ந்து விடக்கூடாது. என்றார்
தேர்தல்கள் வர உள்ளது ----அனைத்து காங்கிரசாரும் ஒற்றுமையுடன் இயங்க சோனியாகாந்தி கடிதம் ஏ.சுகுமாரன்
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, கட்சியின் பத்திரிகையில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ,
சர்வதேச மார்க்கெட்டில் எண்ணை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இது நம் நாட்டின் விலைவாசிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாய உற்பத்தி மற்றும் கொள்முதல் திருப்திகரமாக இருந்த போதிலும், இந்த பாதிப்பு இருக்கிறது.
பணவீக்கத்தை குறிப்பிட்ட அளவுக்குள் கொண்டு வருவதை உறுதி செய்ய அரசு தனியாக கவனம் செலுத்த முடியும். இது விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார்.இன்னும் சில மாதங்களில் 6 மாநிலங்களில் தேர்தல்கள் வர உள்ளது. சமீபத்தில் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் கிடைத்த வெற்றி, தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி இருக்கிறது. இருந்தாலும் நாம் மன நிறைவு அடைந்து விடக் கூடாது.நம் முன் உள்ள சவால்களை சந்திக்க அனைத்து காங்கிரசாரும் ஒற்றுமையுடன் இயங்குவதுடன், கட்சியின் அனைத்து நிலைகளிலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.பாராளுமன்றத்தில் ஜுலை 22 நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு கிடைத்த வெற்றி, அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கொள்கைகள் சரியானவை என்பதை நிரூபித்து காட்டி உள்ளது.
நம்முடைய எரிசக்தி தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்காக நிலக்கரி மற்றும் நீர் வளங்களை மட்டும் சார்ந்து இருக்க முடியாது. அணுசக்தியை பெரிய அளவில் பயன்படுத்த வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தம் மூலம் நாடு கூடுதலாக மின் உற்பத்தி செய்ய முடியும். இதனால் நமது விவசாயிகள், வர்த்தகம், தொழில்துறை, பொருளாதாரம் பலன் பெற முடியும். இதுபற்றி பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். அதன்மூலம் இந்த விஷயத்தில் நம்முடைய நிலையை மக்கள் புரிந்து கொள்வார்கள்.அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மதச்சாயம் பூச சில கட்சிகள் முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த ஒப்பந்தம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், சாதி, மத வேறுபாடின்றி எல்லா இந்தியர்களுக்கும் பலன் கிடைக்கும்.கடந்த 4 ஆண்டுகளில் கிராமப்புற வேலைவாய்ப்பு, தொடக்க கல்வி, சுகாதாரம், சத்துணவு, சமூக பாதுகாப்பு, விவசாய கடன், நகர்ப்புற சேவைகள் என பல்வேறு நலத் திட்டங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தி உள்ளது. ஆனால் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், இத்திட்டங்களை தாங்களே கொண்டு வந்தது போல பெருமையடித்து கொள்கின்றன. காங்கிரஸ் தொண்டர்கள் இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.இவ்வாறு சோனியாகாந்தி அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.



முதல்வரும், அமைச்சர்களும் மோதல் பற்றி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த போகிறாரம் அதிமுக அன்பழகன் ஏ.சுகுமாரன்

அதிமுககட்சியின் செயலரும் எம்.எல்.ஏவுமான. அன்பழகன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசும்போது சட்டப்பேரவையைக் கூட்டி புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனக்குள்ள பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றார் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை ஆதரிக்கும் திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசை எதிர்த்து உண்ணாவிரதம் அறிவித்தன. அரசு மீது நம்பிக்கை இல்லையென்றால் இக் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெறவேண்டியது தானே? கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கையை இழந்த முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையைக் கூட்டி உடனே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் துணைநிலை ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்பேரவையைக் கூட்டவேண்டும். உள்கட்சி பூசல் காரணமாக கடந்த 6 மாதங்களாக முதல்வரும், அமைச்சர்களும் தில்லிக்குப் பலமுறை சென்று வந்துள்ளனர். இதன் மூலம் மக்களின் வரிப்பணம் ரூ.75 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது. முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக நடைமுறையில் உள்ள திட்டங்கள்கூட நிறுத்தப்பட்டுள்ளன. முதியோர் ஓய்வூதியம் உள்பட பல்வேறு உதவித் தொகைக்கான 12 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சமூகநலத்துறை அமைச்சர் அறிவித்த, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட ரூ.2 லட்சம் மானியம், தாழ்த்தப்பட்டவர்கள் மரணம் அடைந்தால் ரூ.10 ஆயிரம், 55 வயது முதியோருக்கு உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. இத் திட்டங்களைச் செயல்படுத்தாததைக் கண்டித்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களைத் தொடரக் கோரியும் அதிமுக சார்பில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் அன்பழகன்.

புதுவையில் டெம்போ கட்டணம் மளமள என உயர்வு ஏ.சுகுமாரன்


புதுச்சேரி நகரப் பகுதிகளில் 3 சக்கர டெம்போ வாகனங்கள் அதிக அளவில் ஓடுகின்றன. டவுன் பஸ்களுக்கு அடுத்த நிலையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களாக இவை உள்ளன. இது புதுவையின் புதுமையாக முன்பு இருந்துவந்தது .. தற்போது இதில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கட்டணம் இதுவரை ரூ.2.50 இருந்தது வெள்ளிக்கிழமை முதல் ரூ.3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஏற்கெனவே வசூல் செய்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
டெம்போ உரிமையாளர்களிடம் வாடகைக்கு எடுத்துதான் இந்த வாகனங்களை டிரைவர்கள் ஓட்டி வருகின்றனர். அதனால் டெம்போ உரிமையாளர்களின் நெருக்கடிக்கு டிரைவர்கள் சங்கத்தினர் பணிந்து செல்லவேண்டிய நிலை வந்தது. இந்நிலையில் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

No comments: