Friday, August 22, 2008

செய்திகள் ஆக்ஸ் 22 மணி 8.00 AM

தன்னிச்சையான தனியார் பஸ் கட்டண உயர்வு ! புமுகா போராட்டதில் இறங்கும் ! லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ தகவல் ! !-----ஏ.சுகுமாரன்
புதுச்சேரியில் தன்னிச்சையாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.இதை கண்டித்து புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் எம்.எல்.ஏவுமான க.லட்சுமிநாராயணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் : புதுச்சேரியில் திடீரென்று பஸ் கட்டணத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் தாங்களாகவே உயர்த்தியுள்ளனர். இதை எங்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். புதுச்சேரியைப் பொறுத்தவரை பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்படும் போக்குவரத்து சாதனம் பஸ்கள்தான். பொதுமக்களுக்கு எந்தச் சிரமும் ஏற்படக் கூடாது என்பதற்காகதான் அரசு சட்டம் இயற்றி தனியார் பஸ்களுக்கு பர்மிட் கொடுத்துள்ளது. பொதுமக்களிடம் வசூலிக்கும் கட்டணத்துக்கும், சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிரமத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் முன்னறிவிப்பு இன்றி திடீரென்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டினாலும் மற்ற மாநிலங்களில் இப்படிப்பட்ட திடீர் பஸ் கட்டண உயர்வு ஏற்படுவதில்லை. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் புதுச்சேரியில் அனைவரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் நிலை ஏற்படும்.
எனவே தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட இந்த பஸ் கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தாத அரசைக் கண்டிப்பதோடு உடனே பஸ் உரிமையாளர்கள் அறிவித்த இந்த பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பார்த்துவிட்டு எங்கள் கட்சியின் சார்பில் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார் லட்சுமிநாராயணன்.
சென்னை , புதுச்சேரியில் தொடரும் டீசல், கியாஸ் தட்டுப்பாடு ! மக்கள் திண்டாடுகின்றனர் ! !-----ஏ.சுகுமாரன்
சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது, கியாஸ் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் கியாஸ் மூலம் இயங்கும் ஆட்டோக்களும் ஓடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டீசல் தட்டுப்பாடு நேற்று 5-வது நாளாக தொடர்ந்தது. இதனால் டீசலால் ஓடும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். சரக்குகளை ஏற்றிக் கொண்டு வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் புறநகர்களில் உள்ள பெட்ரோல் `பங்க்'களில் நீண்ட வரிசையில் டீசல் போடுவதற்காக காத்திருந்தன.சில `பங்க்'களில் குறைந்த அளவே டீசல் இருந்ததால், லாரியை வரிசையில் நிறுத்திய டிரைவர்கள் கேன்கள் மற்றும் குடங்களை கையில் எடுத்துக்கொண்டு டீசல் வாங்க முண்டியடித்தனர். சென்னை மற்றும் புறநகரங்களில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் `பங்க்'களில் நேற்று டீசல் இல்லை.இதனால், பலர் மண்எண்ணெய் ஊற்றி லாரியை ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தொழிற்சாலைகள் பல ஜெனரேட்டர் மூலம் இயங்கிவந்தன.ஆனால், ஜெனரேட்டர் இயக்குவதற்கு டீசல் தேவைப்படுவதால் கடந்த வாரம் வரை டீசல் கொண்டு இயங்கிவந்தன. தற்போது, டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், பல தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். புதுச்சேரியில் இதே நிலை தான் ! மக்ககள் ஒவொரு பங்க்' வாசலிலும் காத்து கிடக்கின்றனர்
ஐ.டி. நிறுவனங்களின் பெருக்கம் காரணமாய் டீசல் தேவை 35 சதவீதம் அதிகரித்துள்ளது:--தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி புதிய தகவல் !-----ஏ.சுகுமாரன்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து, டீசலை அதிகம் உபயோகிக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள், ஜவுளி ஆலைகளையும், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணை நிறுவனங்களை அழைத்து தலைமைச் செயலாளர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு தமிழகத்தில் நிலவி வரும் டீசல் தட்டுப்பாட்டை சரிசெய்ய அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பெருக்கம் காரணமாக, தமிழகத்தில் 35 சதவீதம் டீசல் தேவை அதிகரித்துள்ளது என்று தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி கூறினார்.தமிழகத்தில் தற்போது டீசல் தேவை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 35 சதவீதம் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி.) பெருகியுள்ளதே இதற்கு காரணம். அவர்கள் வாரமுழுவதும், 24 மணி நேரமும் தொடர்ந்து டீசலை பயன்படுத்துகிறார்கள். எண்ணை நிறுவனங்கள் தற்போது, கடந்த ஆண்டு எவ்வளவு டீசலை வழங்கினவோ, அதைவிட 15 சதவீதம் அதிக டீசலை சப்ளை செய்து வருகின்றன. தமிழகத்துக்கு மாதம் ஒன்றுக்கு தற்போது, 42 கோடி லிட்டர் டீசலை எண்ணை நிறுவனங்கள் சப்ளை செய்கின்றன. இதில், அரசு போக்குவரத்துக் கழகங்கள், துறைமுகம், ரெயில்வே, ராணுவம் ஆகியவற்றுக்கு 25 சதவீதம் கொடுக்கப்பட்டு விடுகிறது. இவர்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் டீசலை விட தமிழகத்தின் தேவை மிகவும் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். இந்த பிரச்சினை பற்றியெல்லாம் மத்திய அரசிடம் பேசி, தமிழகத்துக்கு அதிக டீசலை ஒதுக்கி தரும்படி கேட்போம்.இவ்வாறு எல்.கே. திரிபாதி கூறினார்.

இடதுசாரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்'' என்று தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது சற்று அளவுக்கு மீறியது மட்டுமல்ல; நாம் கடைப்பிடித்து வரும் அணுகுமுறைக்கும் முரணானது என்று கருதுகிறேன்.--கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கை !-----ஏ.சுகுமாரன்

இடதுசாரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்'' என்று தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- "இடதுசாரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்'' என்று தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசியதாக சில ஏடுகளில் வந்துள்ள செய்தி பற்றி?
பதில்:- தி.மு.க.வுடன் உறவு குறித்து தங்கள் கட்சியின் மாநிலக்குழுவை கலந்து கொண்டுதான் முடிவு அறிவிக்கப்படும் என்று இடதுசாரி கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ள நிலையில்; தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது சற்று அளவுக்கு மீறியது மட்டுமல்ல; நாம் கடைப்பிடித்து வரும் அணுகுமுறைக்கும் முரணானது என்று கருதுகிறேன்.
அண்மைக்காலமாக குறிப்பாக சில நாட்களாகவே இடதுசாரிகளான கம்ïனிஸ்டு கட்சிகள் இரண்டுமே; நாம் கொண்டிருந்த தோழமைக்கு முற்றிலும் மாறாக செய்திகளை வெளியிடுவதும்- கேலிச்சித்திரங்கள் வரைவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் - "நந்திக்கிராமம்'' பிரச்சினையில்- மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி உறுப்பினர் பாலபாரதி கூறியதை போல- நாம் கடைப்பிடித்த அணுகுமுறைக்கும்- "ரெட்டனை'' கிராமத்து பிரச்சினையை அவர்கள் ஊதிவிடுவதற்கும் உள்ள வேறுபாட்டை அவர்களே சிந்தித்து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.
இவற்றையன்னியில் நமது கழகத்தினர் யாராயினும்- குறிப்பாக நம்முடன் தோழமை கொண்ட கட்சிகளை பற்றி- அவர்கள் எடுக்கும் முடிவினை அறிந்து, அதன் பின்னர் நாம் நமது தலைமைக்குழுவில் ஒரு முடிவெடுத்து அறிவிக்கும் வரையில் அவசரப்பட்டு விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கூட்டணி கட்சிகளாயிருந்த போது கொண்டிருந்த நட்பையும்- ஒருவருக்கொருவர் துணையாக இருந்து உதவிக் கொண்ட நன்றியுணர்வையும்- திடீர் மாற்றங்கள் எனும் தீயில் கருகிவிட விட்டு விடக்கூடாது.
கேள்வி:- பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை தமிழகத்தில் கொண்டு வர வாய்ப்பில்லை என்று பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணைய தலைவர் சின்கா தெரிவித்துள்ளது பற்றி?
பதில்: முதல்-அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு அருமை நண்பர் எம்.ஜி.ஆரே, இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் அமல்படுத்த முயற்சி செய்து ஆணை பிறப்பித்த போது, அதை எதிர்த்து தமிழகத்தில் எரிமலையே வெடித்ததையும் அந்த ஆணையை திரும்ப பெறுவதை தவிர எம்.ஜி.ஆருக்கு வேறு வழியில்லாமல் போனதையும் தமிழகத்தின் "சமூகநீதி வரலாறு'' கோடிட்டு காட்டுகிறதே!
பிற்படுத்தப்பட்டோர் அல்லாத மாணவர்களுக்கு கூட இடஒதுக்கீடு வாய்ப்பு வழங்க; அந்த மாணவர்களுடைய வீட்டில் அதுவரை யாரும் பட்டதாரியாக இல்லாமல் இருந்து, அந்த மாணவர்தான் தொழில் கல்விக்கு விண்ணப்பிக்கும் முதல் மாணவராக இருக்க வேண்டும் என்று தி.மு.க. ஆட்சியில் ஓர் அரசாணை பிறப்பித்தோம்- அதுவும் நீதிமன்றத்தில் நிற்கவில்லை.
கேள்வி:- "பாபர் மசூதி'' இடிக்கப்பட்ட பிறகும்; பா.ஜ.க.வுடன் தி.மு.க. தேர்தல் உறவு கொண்டது நியாயமா? என்று மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் டி.கே.ரங்கராஜன் கேட்டிருக்கிறாரே?
பதில்: காலத்திற்கு காலம் இடத்துக்கு இடம்- மாநிலத்துக்கு மாநிலம்- முரண்பாடு கொண்ட அணிகள் எவை எவை? அவை எப்போது? நேரடி விவாதத்துக்கு கூட நான் தயார்- ஆனால் பா.ஜ.க.வுடன் தி.மு.க. தேர்தல் அணி சேர்ந்த போது "குறைந்தபட்ச செயல்திட்டம்'' என ஒன்று தயாரிக்கப்பட்டு, அதில் இருசாராரும் கையெழுத்திட்டுள்ளோம். அத்திட்டத்தில் "மதச்சார்பு'' அரசியலுக்கு இடமில்லை. அதை பா.ஜ.க. மீறிய போது, அதை விடுத்து அமைச்சர்கள் பதவி விலகி, தி.மு.க. வெளியேறியது என்பது வரலாறு!கேள்வி:- டி.வி. நிறுவன உரிமை பெற்றவர்கள், தங்களின் "டி.வி. சேனல்'' காட்டும் உரிமையை வேறு ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தினர் கேட்டால் தர வேண்டும் என்று சட்டரீதியான விதிமுறையே இருக்கும் போது, "திருமண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால், திருமணமே நின்று விடும்'' என்று நினைப்பதை போல, தனியாருக்கு கூட அல்ல, அரசு கேபிள் டி.வி நிறுவனத்துக்கே சன் டி.வி. சேனல்கள் தருவதற்கு மறுக்கப்படுகிறதே ஏன்?
பதில்:- இதுபற்றி அரசு டி.வி. சார்பில் வழக்கு தொடருவதால் நான் எதுவும் சொல்வதற்கில்லை.
கேள்வி:- விசைத்தறி வேலை நிறுத்தம் காரணமாக இலவச வேட்டி சேலை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?
பதில்:- விசைத்தறியாளரின் வேலை நிறுத்தம் குறித்து தமிழக அரசின் சார்பில் 2 அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த வேலை நிறுத்தம் காரணமாக இலவச வேட்டி சேலை வழங்குவதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்கு அணு எரிபொருள் தர ஆஸ்திரியா, அயர்லாந்து, நிïசிலாந்து தொடர்ந்து எதிர்ப்பு ! அணு எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் !-----ஏ.சுகுமாரன்
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு, 45 நாடுகள் அடங்கிய அணு எரிபொருள் வினியோக நாடுகள் அமைப்பு, அணு எரிபொருளை வினியோகம் செய்து வருகிறது. இந்தியா கடந்த 1974-ம் ஆண்டு, முதன்முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால், இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க தடை விதிக்கப்பட்டது. 34 ஆண்டுகளாக இத்தடை அமலில் உள்ளது. மேலும், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடாமல் இருக்கிறது. அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்ட போதிலும், அணு எரிபொருளை மேற்கண்ட 45 நாடுகள்தான், வினியோகம் செய்ய வேண்டும்.எனவே, இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிப்பதற்கான தடையை நீக்குமாறு, இந்த அமைப்பை இந்தியா வற்புறுத்தி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் 18-ந் தேதி இந்த அமைப்பின் பிரதிநிதிகளிடம் இந்தியா விளக்கம் அளித்தது.
இந்தியா இரண்டாவது முறையாக, அணு எரிபொருள் வினியோக அமைப்பின் 45 நாட்டு பிரதிநிதிகளிடம் நேற்று விளக்கம் அளித்தது. ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் இக்கூட்டம் நடைபெற்றது. வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் தலைமையிலான இந்திய குழு, அனைத்து பிரதிநிதிகளுக்கும் கூட்டாக 30 நிமிடங்கள் விளக்கம் அளித்தது. பிரதிநிதிகள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தது.
உலக அளவில் அணு ஆயுத பரவல் தடைக்கு இந்தியா எடுத்துக்கொண்ட உறுதியை எடுத்துரைத்தது. இந்தியா மீதான தடையை நீக்கினால், அணு ஆயுத பரவல் தடைக்கு எத்தகைய பலவீனமும் ஏற்படாது என்று இந்தியா உறுதி அளித்தது.
பின்னர், அணு எரிபொருள் வினியோக அமைப்பின் பிரதிநிதிகளை சிவசங்கர் மேனனும், பிரதமரின் விசேஷ தூதர் ஷியாம் சரணும் தனித்தனியாக சந்தித்து விளக்கம் அளித்தனர். பின்னர், சிவசங்கர் மேனன் நிருபர்களிடம் எதுவும் கூற மறுத்து விட்டார்.
ஆனால் இந்தியா அளித்த விளக்கம் சாதகமான வகையில் இருந்ததாகவும், பயனுள்ளதாக இருந்ததாகவும் ஒரு பிரதிநிதி தெரிவித்தார்.

அணு எரிபொருள் வினியோக அமைப்பை பொறுத்தவரை, எந்த பிரச்சினையிலும் ஒருமித்த முடிவையே எடுக்கும். ஏதாவது ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த பிரச்சினைக்கு ஒப்புதல் அளிக்கப்படாது. இந்தியா மீதான தடையை நீக்கும் பிரச்சினையில், ஆஸ்திரியா, அயர்லாந்து, நிïசிலாந்து ஆகிய நாடுகள், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்தகைய நாடுகளின் கவலையையும், பயத்தையும் போக்குவதற்குத்தான் இந்தியா நேற்று விளக்கம் அளித்தது. ஆனால் இந்த நாடுகள் இறுதிவரை எதிர்ப்பு தெரிவித்தால், இந்தியாவுக்கு அணு எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
பாமகவின் மது ஒழிப்பு மாநாடு ! திருவண்ணாமலையில் ஆகஸ்டு 24ஆம் தேதி ! !-----ஏ.சுகுமாரன்

பாமகவின் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சங்கம் சார்பில் ஆகஸ்டு 24ஆம் தேதி திருவண்ணா மலை அரசு கலைக் கல்லூரி அருகே சந்தை மைதானத்தில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. மது ஒழிப்பு மாநாட்டில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்கிறார் பாமக எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகின்றனர்.மாநாட்டிற்கான ஏற்பாடுகளைப் பாமக மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.காளிதாஸ், மாவட்டச் செயலாளர்கள் பாபு நாயுடு, மன்னப்பன், சரவணன், பாண்டியன் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.
இனி ரத்ததானம் தேவையில்லை ! செயற்கை ரத்தம் தயார் ! விஞ்ஞானிகள் சாதனை! !-----ஏ.சுகுமாரன்
செயற்கை ரத்தத்தை உருவாக்க பரிசோதனைக் கூடங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட செயற்கை ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் இயற்கையான சிவப்பணுக்களை போல செயல்படுவதற்கு பதிலாக புற்றுநோய் செல்களாக மாறி பேராபத்தை ஏற்படுத்தின. இதனால் செயற்கை ரத்தம் உருவாக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக் கழகம்- ரோசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து செயற்கை ரத்தம் தயாரித்து சாதனைப் படைத்துள்ளனர்.
கருவை உருவாக்கும் செல்களிலிருந்து ரத்த அணுக்களை உற்பத்தி செய்து, அதன் மூலம் செயற்கை ரத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, மனித ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை போலவே, செயற்கை ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களுக்கும் ஆக்சிஜனை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் விபத்து, அறுவைச் சிகிச்சை போன்ற இக்கட்டான காலங்களில் செயற்கை ரத்தத்தை பயன்படுத்தி உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.
"அவசரக் காலங்களில் பரிசோதனை செய்யப்படாமல் செலுத்தப்படும் ரத்தத்தின் மூலம் பல்வேறு நோய் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. ஆனால், செயற்கை ரத்தத்தில் அதுபோன்ற அபாயம் இருக்காது" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: