Saturday, August 09, 2008

செய்திகள் ஆக்ஸ் 9 மணி 7.45 AM

29-வது ஒலிம்பிக் போட்டி கோலகல துவக்கம் : வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் -- ஏ.சுகுமாரன்

சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி, 90 ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் வண்ணமயமான நிகழ்ச்சியில், சீன அதிபர் ஹு ஜிந்தாவோ போட்டி தொடங்குவதாக அறிவித்தார்.
எண் "8' அதிர்ஷ்டத்தைத் தரும் என்கிற நம்பிக்கை சீனாவில் உள்ளதால் 2008 ஆகஸ்ட் 8-ல் (08-08-08) போட்டியைத் தொடங்கினர். சீன நேரப்படி இரவு 8.08 மணிக்கு தொடக்க நிகழ்ச்சிகள் துவங்கின. அதற்காக செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி பிரமிப்பூட்டியது.
சீனாவின் பண்டைய கால வாழ்க்கை முறையிலிருந்து சமீப கால சாதனைகள் வரை, பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன. சீன பெருஞ்சுவர், சில்க் சாலை, குங்பூ போன்ற கலைகளில் ஈடுபாடுள்ளதை, தங்களது அற்புதமான நடனம் மூலம் கலைஞர்கள் எடுத்துக்காட்டினர். பல கோடி ரூபாய் செலவில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகள், விண்ணை அதிரவைத்ததுடன் பெய்ஜிங் நகரை பகலாக்கியது.
ஒலிம்பிக் போட்டியை 1896-ல் தோற்றுவித்த கிரீஸ் நாடு அணிவகுப்பில் முதலில் வந்தது. அதன் பின்னர் சீன அகர வரிசைப்படி 205 நாடுகள் அணி வகுத்தன. சுமார் 5 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இநதிய: ராணுவத்தில் பணியாற்றும் துப்பாக்கி சுடுதல் வீரர் ராஜ்யவர்தன் சிங் ரதோட் இந்திய தேசியக் கொடியை கம்பீரமாக ஏந்திவர, வீரர், வீராங்கனைகள் அணிவகுத்தனர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ரஷியப் பிரதமர் விளாதிமீர் புதின், பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி, ஜப்பான் பிரதமர் யசுவோ புகுடா, தென் கொரிய அதிபர் லீ மியுங்-பக் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

அண்ணா, பெரியார், காமராஜர் போராடிய சேதுசமுத்திர திட்டம் இல்லை என்றால் தமிழகத்திற்குதான் நஷ்டம்- கருணாநிதி -- ஏ.சுகுமாரன்

தமிழக அரசு சார்பில் 2006-ம் ஆண்டிற்கான சின்னத்திரை தொடர்களில் சிறந்த நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் மற்றும் 2005, 2006-ம் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமைதாங்கி சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளையும், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மானியத்தையும் வழங்கினார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும் போது சேதுசமுத்திர திட்டம் பற்றி பேசினார் சேதுசமுத்திர திட்டம் நிறைவேறாவிட்டால் தமிழகத்திற்குதான் நஷ்டம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார் மேலும் ஒரு தமிழன் இன்னொரு தமிழனைப் பார்த்து தூற்றுகிறான். அல்லது கேலி செய்கிறான் அல்லது கிண்டல் செய்கிறான் அல்லது கேவலமாக பேசுகிறான் என்றால் அதை அவமானம் இல்லையா என்று கேட்டால், நான் ஒன்றை இந்த அவையிலே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் இன்று படுகின்ற அவமானத்தால் தமிழன் எதிர்காலத்திலே தலைதூக்கி நிற்பான், அதற்காக நான் இந்த அவமானத்தைப் பெறுகிறேன், ஏற்றுக்கொள்கிறேன் என்றால் இப்படி ஆயிரம் அவமானங்கள் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
எனக்கு வேண்டியது, உச்சநீதிமன்றம் வரையிலே சென்று நியாயம் கேட்கிறோம் என்றால் எதற்காக கேட்கிறோம்? எதற்காக வாதாடுகிறோம்? பெரியாரும், அண்ணாவும், காமராஜரும் எந்த சேதுசமுத்திர திட்டத்திற்காக குரல் கொடுத்தார்களோ, அந்த திட்டம் நிறைவேற வேண்டும், அதை இடையிலே வந்தவர்கள் கெடுக்க நினைக்கிறார்கள். ஏதேதோ காரணங்களைக்கூறி அந்த திட்டமே நிறைவேறக்கூடாது என்று கருதுகிறார்கள். அது நிறைவேறாவிட்டால் அது இலங்கைக்கு லாபம். தமிழகத்திற்கு நஷ்டம்.
தமிழகத்தின் வளம், வாணிபம், வர்த்தகம், எதிர்காலம் இவைகள் எல்லாம் பாதிக்கப்படும். ஒருதிட்டம் நிறைவேற வேண்டும், அந்த திட்டம் சேதுக் கால்வாய் திட்டம், அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அண்ணா போராடினார். பெரியார் போராடினார். காமராஜர் நேருவிடம் சென்று வாதிட்டார். அத்தகைய ஒரு திட்டத்தை இன்றைக்கு மடக்கிப் போடச் செய்யப்படுகின்ற சூழ்ச்சியை எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடித்து நாம் தாங்கிக் கொண்டிருக்க முடியும் என்ற காரணத்தினாலே தான், அந்த போராட்டத்தில் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும் பரவாயில்லை. அதனைத் தாங்கிக் கொண்டு தமிழகத்தை தாங்குவதற்கு நம்முடைய எதிர்காலத்தை வளமாக்குவதற்கு நம்முடைய தமிழ்இனத்தின் குழந்தை குட்டிகள், எதிர்காலச் சமுதாயம் நலிவடையாமல் இருப்பதற்கு நலிந்து போகாமல் காப்பாற்றப்படுவதற்கு நாம் நம்மை தியாகம் செய்வதென்றால் தியாகம் என்பது உயிரைக் கொடுப்பது மாத்திரமல்ல, தியாகம் என்பது, அவமானப்படுவது கூட தியாகம் தான்.
சகிப்புதன்மை, பொறுத்துக்கொள்வது, அது அவமானம் என்றாலும் அதைப்புகழாகவே எண்ணிக்கொள்வது, இவை ஒருவரை வாழ வைக்குமே தவிர அவரை வாடவிட்டு விடாது. அவருடைய எதிர்காலத்தை இருளாக்கிவிடாது. அந்த நம்பிக்கையோடுதான் எவ்வளவு அவமானங்கள் வந்தாலும், எவ்வளவு கண்டனங்கள் வந்தாலும் எவ்வளவு கேலிகள், கிண்டல்கள் வந்தாலும் அவைகளைப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்

டெல்லியில் எந்த முடிவும் எடுக்கவில்லை ! ரங்கசாமி மாற்றம் இப்பொது இல்லை -வயலார் ரவி அறிவிப்பு -- ஏ.சுகுமாரன்

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக அவரது அமைச்சர்கள் வைத்திலிங்கம், வல்சராஜ், ஷாஜகான், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகிய 5 பேரும் போர்க்கொடி உயர்த்திவருகின்றனர். இதற்காக புதுச்சேரியில் இருந்து டெல்லி செல்வதை வாடிக்கையாக கொண்ட அமைச்சர்கள் மாதத்தில் 25 நாட்களுக்கு மேலாக டெல்லி சென்றதால்அமைச்சரவை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கட்சியின் மேலிட ஒருங்கிணைப்பாளர் வயலார் ரவி மற்றும் பொறுப்பாளர் அருண்குமாருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தி புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் படி உத்தரவிட்டார்.இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் இருந்து அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு வயலார் ரவியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது முதல்-அமைச்சருக்கு எதிராக மாநில அமைச்சர்கள் 5 பேர் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனுப்பிய புகார் குறித்து வயலார் ரவி எழுப்பிய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விளக்கம் அளித்தார். சுமார் 2 மணி நேரம் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சு நடத்திய பின்னர் நிருபர்களிடம் பேசிய வயலார் ரவி, முதல்-அமைச்சருக்கு எதிராக புகார் அளித்த அமைச்சர்களிடம் தொடர்ந்து விளக்கம் கேட்கப்படும் என்றும் அதன்பின் அடுத்து வாரம் புதன்கிழமை மீண்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை டெல்லிக்கு வரும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.மேலும் புதுச்சேரியில் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் இந்த பிரச்சினையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை மாற்றுவது குறித்து கட்சி மேலிடம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பச்சைவாழியம்மன் கோவில் தீ மிதிவிழா ! கன்னியகோவில் எங்கும் ஆடி மாத பரவசம் !---- ஏ.சுகுமாரன்

புதுவை கிருமாம்பாக்கம் கன்னியகோவிலில் உள்ள பச்சைவாழியம்மன், கோவில் தீமிதிவிழா மகோற்சவம் கடந்த 31-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காலையில் வள்ளிதெய்வானை சுப்பிரமணியர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.பின்பு மாலை 5 மணிக்கு மேல் தீமிதி விழா நடைபெற்றது.
இதில் சிறுவர்கள் முதல் பெண் பக்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.முன்னதாக ஏராளமான பெண்கள் சாமிக்கு பொங்கலிட்டு படைத்தனர். . தீமிதிவிழாவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இடைïறு இல்லாமல் இருக்க கடலூர் -புதுச்சேரி செல்லும் கனரக வாகனம் மற்றும் கார்களை மாற்று வழியில் போக்குவரத்து போலீசார் திருப்பி விட்டனர்.
கடலூர் வரதராஜ பெருமாள் கருட ஜெயந்தி விழா-ஆடிமாதம் சுவாதி விழா--- ஏ.சுகுமாரன்

மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடனை இந்துக்கள் போற்றி வழிபடுகிறார்கள். ஆடிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தார். இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி சுவாதி அன்று பெருமாள் கோவில்களில் கருட ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலிïர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று கருட ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 7 மணிக்கு கருட ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து பகல் 11 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள் ஸ்ரீ பெரியாழ்வார், ஸ்ரீ கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள் ஸ்ரீ கருடாழ்வார் எதிர்சேவையுடன் புறப்பாடும், இரவு 7 மணிக்கு 5 வகை மலர்களால் கருடனுக்கு யாகம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.கருடபகவான் 9 நவகிரகங்களையும் பாம்புகளாக்கி அவற்றை தன்னுடைய உடலில் அலங்கரித்துள்ளார் என்றும், அதனால் அவரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் இருக்காது. பாம்பு, தேள் போன்ற பயம் நீங்கும். திருமணம் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை

No comments: